கோப்பிலாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்

விமானப்படையினர் தமது சொந்த நிலங்களில் இருந்து உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று திங்கட்கிழமை ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் கொழும்பு, காலிமுகத்திடலில் அரச தரப்பால் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி விமானப் படைத்தளம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திரதின நாளை கறுப்பு நாளாக அவர்கள் கடைப்பிடித்தனர்.
கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சுவீகரித்து, அங்கு விமானப் படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர், அதனைப் பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும், காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்பிலவு கிராமசேவகர் அறிவித்திருந்தார்.
மக்கள் நாள் முழுவதும் வீதியில் காத்திருந்தபோதும், அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிடச் சென்றிருக்கவில்லை.
இந்நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்த மக்கள், தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் தமது போராட்டம் நிறைவுபெறும் எனக் கூறி வயது வேறுபாடின்றி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மக்களுக்கான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்பு போன்ற பொருட்களை வர்த்தகர்கள் நலன்விரும்பிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வழங்கி இப்போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த மக்கள் நடாத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, கேப்பாப்பிலவு கிராம மக்கள் முழுமையாக ஒன்றுதிரண்டு நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
தற்போது மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பதாகைகளை ஏந்திய மக்கள், கேப்பாப்பிலவு விமானப் படையினரின் முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக அவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவனேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை அதிகாரி ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
காணி விவகாரம் தொடர்பில் கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்குக் காத்திருக்கின்றனர் எனவும், உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர் எனவும், இதனை அவர்கள் தன்னிடம் தெரிவித்தனர் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தெரிவித்துள்ளார்.
மக்களின் இந்தப் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com