கோத்தாவைக் கைதுசெய்யும் இடைக்காலத் தடை நீடிப்பு

முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (15) மூன்றாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதவான் எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

இதன்போது, சட்ட மா அதிபரினால் குறித்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதனை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த இடைக்கால தடையை எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்தது.

வீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 – டிசம்பர் 06, டிசம்பர் 06 – டிசம்பர் 15 என குறித்த இடைக்காலத் தடை இன்று (15) வரை நீடிக்கப்பட்டதோடு, இன்று மூன்றாம் முறை இத்தடை மீண்டும் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த கட்டுமானம் தொடர்பில், வழமையாக பின்பற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com