சற்று முன்
Home / செய்திகள் / கோட்டாபய யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடாது’: குமார் குணரட்ணம் …

கோட்டாபய யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடாது’: குமார் குணரட்ணம் …

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகனின் வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் வர பாதுகாப்பு பிரச்சனையென கோட்டாபாய நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மையென்றால், அவர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கும் யாழ்ப்பாணம் வரக்கூடாது என தெரிவித்துள்ளார் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம்.

யாழில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலேயே இலங்கையில் வெள்ளைவான் கலாச்சாரம் உருவாகியது. சஜித் பிரேமதாச தனது தந்தை வழியில் செல்வதாக கூறுகிறார். அவரது தந்தையின் காலத்தில் 60,000 இளைஞர்களிற்கு என்ன நடந்ததென்பது எமக்கு தெரியும். ஜேவிபி சோசலிசத்தை கைவிட்டு விட்டது. அவர்களிடம் வேலைத்திட்டமெதுவுமில்லை. மக்களிற்கான வேலைத்திட்டத்துடன் முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக, மத்திய குழு உறுப்பினர் ஹேமமாலி அபேயரத்ன, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட லலித் குமாரின் தந்தை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய குமார் குணரட்ணம்,

லலித், குகன் தோழர்கள் கடத்தப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிறது. அந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. ஒக்ரோபர் 31ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சாட்சியளிக்க வேண்டிய கோட்டாபய வர வேண்டும். ஆனால் வரவில்லை.

சாட்சியளிக்க யாழ்ப்பாணம் வராமலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் ஒரு உத்தரவை பெற்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு போதாது என குறிப்பிட்டே அவர் விண்ணப்பித்திருந்தார். இந்த நீதிமன்ற முறைமைகள் குறித்து எங்களிற்கு சந்தேகம் வந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அவர். வழக்கிற்கு அவர் வர பாதுகாப்பு பிரச்சனையென்றால், அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் வர முடியாது.

அதில் ஒரு அரசியல் விடயமும் உள்ளது. இது லலித், குகனின் தனிப்பட்ட பிரச்சனையில்லை. வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கானவர்களின் பெற்றோர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளிற்கு என்ன நடந்ததென தெரியாமல் வீதியிலிருக்கிறார்கள்.

தன்னுடைய பிள்ளைகளை இராணுவம், பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் பற்றிய தகவல் தெரியாமல் உள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து அது பற்றி முறையிட்டும் ஒரு பலனும் இல்லை.

ஜனநாயக விரோத ராஜபக்ச ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனையுடன் சேர்ந்த ஒரு பிரச்சனைதான் லலித், குகனின் பிரச்சனை. வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித் திரிந்தவர்கள்தான் அவர்கள் இருவரும். அதனால்தான் 2011 டிசம்பரில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

2009 இல் யுத்தம் முடிந்ததென ராஜபக்ச அரசு சொன்னது. இப்பொழுது ஆயுத போராட்டம் ஒன்றில்லை, யுத்தத்தை முடித்து விட்டோம் என தமது அரசியல் தேவைக்காக பிரச்சாரம் செய்தார்கள். புலிகள் இல்லையென்றால் யாரிடம் ஆயுதம் இருந்தது. இராணுவத்திடமும், ராஜபக்ச ஆட்சியின் ஆதரவாளர்களிடமுமே ஆயுதம் இருந்தது. ஆகவே, இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.

இது ஒரு அரச பயங்கரவாத சம்பவம்.

இலங்கையின் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தேசிய பாதுகாப்பும், ஒழுக்கத்தையும் பற்றி கதைக்கிறார். 2005 இல் இருந்து 2010 வரை அவரது ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் நாங்கள் அறிவோம். அவரது காலத்தில்தான் வெள்ளை வான் கலாச்சாரம் வந்தது. லசந்த விக்கிரமதுங்க மாதிரியான ஊடகவியலாளர்களின் கொலை நடந்தது. எக்னொலி கொட போன்றவர்களின் காணாமல் போன சம்பவங்கள் நடந்தன. இந்த மாதிரியான வேட்பாளரைத்தான் மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்துள்ளார்.

இதை பற்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கவனிக்க வேண்டும்.

கோட்டாபய, சஜித், அநுர ஆகிய அனைவரும் ஒரேவழியிலேயே பயணிக்கிறார்கள். முதலாளித்துவமே அவர்களின் கொள்கை. சிங்கப்பூரில் லீ குவான் யூ, மலேசியாவில் மகாதீர் முகமட் வழியில் போகிறார். சஜித் பிரேமதாச தனது தந்தையின் வழியில் போவதாக சொல்கிறார். அவரது அப்பா போன வழி எங்களிற்கு தெரியும். பிரேமதாசவின் காலத்தில் 60,000 இளைஞர்களிற்கு என்ன நடந்ததென்பது எங்களிற்கு தெரியும். அவரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. யார் வேட்பாளர் என்றுதான் இதுவரை பிரச்சனைப்பட்டார்கள்.

கடந்த நான்கரை வருடத்தில் இவர்களின் ஆட்சி எப்படி நடந்ததென்பது எங்களிற்கு தெரியும். ஜனநாயக்கத்தை பற்றி அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு என்ன நடந்ததென்றும் தெரியும். இந்த அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒருவராக சஜித் சொல்ல முடியாது. அவரும் இதன் அங்கமே.

21ம் திகதி நடந்த குண்டு வெடிப்பிற்கு பின் முஸ்லிம் மக்களிற்கு எதிரான பீதியை உருவாக்கி தேர்தலில் வெல்ல கோட்டாபய முயற்சிக்கிறார். முன்னர் தமிழர்களிற்கு எதிரான பீதியை கிளப்பியிருந்தார்கள்.

சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் சஜித்தும் இப்போது இனவாதம் பேசுகிறார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்தால் தமிழர்களின் உரிமைகளை பற்றி பேசுவது, முஸ்லிம் பகுதிகளிற்கு போய் முஸ்லிம் உரிமையை பற்றி பேசுவது. வேறுவேறு பாசையில், வேறுவேறு உச்சரிப்பில் பேசுவதைத்தான் இருவரும் செய்கிறார்கள்.

எங்களுடைய பழைய நண்பர்கள்- ஜேவிபி- இப்பொழுது சோசலிசத்தை பற்றி கதைப்பதில்லை. இந்த முறைமையை எப்படி மாற்றுவதென்ற ஒரு வேலைத்திட்டம் அவர்களிடமும் இல்லை.

எங்களுக்கு வேலைத்திட்டம் ஒன்றுள்ளது. கூட்டணியொன்றுள்ளது. அது மக்களுடனான கூட்டணி. எமது கட்சியின் சார்பில் துமிந்த நாகமுவ களமிறங்கியுள்ளார். பொருளாதார பிரச்சனை, தேசிய பிரச்சனை, இனங்களிற்கிடையிலான பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்த வேலைத்திட்டங்களை எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் வரவுள்ளோம் என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com