கொழும்பில் ஒரு வாரகால சத்தியாக்கிரகப் போராட்டம் – சமஉரிமை இயக்கம் அழைப்பு

வடகிழக்கில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த போராடங்களுக்கு விரைவான தீர்வை வழங்க வலியுறுத்தியும் கொழும்பில் ஒருவார சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சமவுரிமை இயக்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிச கட்சி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேற்படி கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இதன் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், யுத்தத்தை நடாத்திய மஹிந்த அரசு போய் தற்போது ரணில்-மைத்திரி அரசு வந்து இரு வருடங்களுக்கு மேலாகி விட்டது ஆனாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இன்று ஆட்சியில் வீற்றிருக்கும் ரணில்- மைத்திரி அரசு ஜனநாயகத்தை வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது.
ஆனால் வடக்கு கிழக்கில் யுத்த சூழ்நிலைகளுக்கு நிகராக தொடந்தும் முப்படைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மக்களுடைய நிலங்களும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இக்கானிகள் தேசிய பாதுகாப்புக்கு தேவை என கூறப்பட்ட போதும் பல்தேசிய கம்பனிகளுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டுள்ளது. மக்களுடைய காணிகளில் பாரியளவு பண்ணைகள் அமைக்கும் வேலையும் மற்றும் விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த முடியாமல் வறுமையில் வாழ்கின்றனர். இந்திய உதவியினால் வீடு வழங்கல் என கூறப்பட்ட போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டுவதற்கு காணி அற்ற நிலையில் வாடகை வீடுகளிலேயே தங்கியுள்ளனர். யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளுக்கும் அழிப்புக்களுக்கும் எந்தவிதமான நிவாரங்களும் வழங்கவில்லை.
யுத்தம் முடிவில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் தான் உள்ளார்கள். பல நூற்றுக்கனக்க அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளுக்குள்ளேயே உள்ளார்கள். இவை தொடர்பான வாக்குறுதிகளை கடந்த காலங்களில் இந்த அரசு வழங்கியிருந்த போதிலும் அவை எவையும் நிறைவேற்றப்படாமல் இன்றும் கிடப்பிலேயே உள்ளன. அத்துடன் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த அரசாங்கம் முனைப்பு காட்டியதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் தான் தன்னெழுச்சியாகவும், சமூக அமைப்புக்களிடமும் சேர்ந்து தொடர்ச்சியாக தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். சமவுரிமை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு விதமான வடிவங்களில் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு அடித்தளமிட்ட லலித், குகன் ஆகிய இருவரையும் கடந்த அரசு கடத்தி சென்று காணாமல் ஆக்கியது. இவ்வாறு பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் கடத்தி செல்லப்பட்டிருந்தனர்.
தற்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான எதிர்ப்பு சத்தியாக்கிரக போராட்டங்களை பாதிப்புக்குள்ளான மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இம்மக்களின் நியாயமான போராட்டங்கள் வடக்கு கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது. இவர்களுக்கு ஆதரவான குரல் தெற்கிலும் ஒலிக்க வேண்டும். இந்த வகையில் சமவுரிமை இயக்கம் சகோதர மொழி பேசும் மக்கள் அணிதிரட்டி அவர்களின் ஆதரவுடன் மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒருவார சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்பில் நடத்தவுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போராட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள், இடதுசாரிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், மற்றும் தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கு கொள்வாரகள். வடகிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்கு, சகல காணாமல் ஆக்கல்களையும் உடன் வெளிப்படுத்து, சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய் ஆகிய கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com