சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / கொரோனோ அச்சநிலை – அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவியுங்கள்

கொரோனோ அச்சநிலை – அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவியுங்கள்

கோரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பிணையில் விடுவிக்கவேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ சேனாதிராசா, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்சற்கும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 – 24 வருடகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைகளில் உள்ளனர். தற்போதைய கோரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளைப் போன்று அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு வகைகளின் கீழ் அடங்குகின்றனர். நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு அவர்களுக்குரிய தண்டனையை அனுபவிக்கும் கைதிகள், விசாரணை முடிவுகள் நிலுவையிலுள்ள கைதிகள், சந்தேகத்திற்கிடமான வகையில் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இன்னமும் குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாத கைதிகள், தடுப்புக்காவல் உத்தரவு மற்றும் குற்றவியல் விசாரணைத்துறையின் கீழ் சிறைகளில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகியோரே அவர்களாவர்.

தற்போது சில சிறைக்கைதிகள் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றமை கண்டறியப்பட்டிருப்பதுடன், ஏனையோருக்கு தொற்றுப்பரவக்கூடிய ஆபத்துக்களும் காணப்படுகின்றன. இப்போது அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையால் கைதிகள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இவ்வாறு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டு, அவர்களது வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் பிணையில் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தற்போதைய கோரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளைப் போன்று அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கேனும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

லொஹான் ரத்வத்த தொடர்பான சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com