கைதிகளின் நிலை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரகால சட்டவிதிமுறைகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் ‘ஆழ்ந்த’ கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை மீளாய்வு செய்யுமாறும் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்ட வழக்குகளையும் நம்பகமான ஆதாரங்கள் இல்லாத வழக்குகளையும் ஒப்பீட்டளவில் சிறுகுற்றங்களுக்கான வழக்குகளையும் மீளப்பெறுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டவிதிமுறைகளின் கீழ், நம்பகமான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபரை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அடுத்த கட்டமாக உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் உள்ள கவலைகள் பற்றியும் சட்டமா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com