கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே  மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற நிலை இருந்தது. அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும், புலிகளையும் மக்களையும் பிரிக்க முடியாமல் போகும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுடைய தலமைகளாகக் கொண்டுவர முடியாமல் போகும் என்ற ஒரு சூழலில் தான் குமார் பொன்னம்பலம்  படுகொலை செய்யப்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 
 

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18  ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.01.2018) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் யாழ் மாநகர துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன் தலைமையில் நடைபெற்றது.  நினைவேந்தலில் அகவணக்கத்தையடுத்து  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின்  திருவுருவப் படத்துக்கு அவரது புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார். அதனையடுத்து சுடரஞ்சலி மற்றும் மலரஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனையடுத்து இடம்பெற்ற நினைவுரைகளின்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேலும் குறிப்பிடுகையில்,
 
“மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டபோது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அப்போது விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களை நினைவுகூர முடியாத ஒரு சூழல் காணப்பட்டிருந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு  தாக்குதல் நடவடிக்கைக்குத் தயாராகுவ போல ஆயிரக்கணக்கில் திரண்டு மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அந்தளவிற்கு நினைகூரத்தக்க வகையில் மாமனிதர் இந்தத் தேசத்திற்கு அற்பணிப்பைச் செய்திருந்தார்.
 
ஏன் குமார் பொன்னம்பலத்தை கொல்கின்ற அளவிற்கு சந்திரிக்கா அசாங்கம் சென்றது என்பதைத்தான் நாங்கள் இன்றைய காலகட்டத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். 
என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாகச் சித்தரிக்கப்படவேண்டி தேவை சந்திரிக்கா அரசாங்கத்துக்கு இருந்தது. அந்த இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது. அவர்கள் துப்பாக்கி முனையிலே மக்களை அடக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற ஒரு போலி முகத்தை காட்டவேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்க விரும்பிய சக்திகளுக்கு இருந்தது. இதில் முதலாவது தேவை இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இரண்டாவது தேவை இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பிய வல்லாதிக்க சக்திகளுக்கு இருந்தது. 
 
இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக தமிழர்களை வெறும் கருவியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் தமிழர்களுக்காக நேர்த்தியாக சிந்திக்கக்கூடியவர்கள் தலமைத்துவத்தில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. முன்னரும் பல இயக்கங்கள் உருவாகின. அவை தங்கள் கொள்கை கோட்பாடுகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா கொள்கைகளை வகுக்கட்டும் நாங்கள் இந்தியாவின் சிறந்த சிப்பாய்களாக இருப்போம் என பிரகடனங்களைச் செய்துகொண்டு கூலியாட்களாகச் செயற்படத் தொடங்கின. ஆனால் தமிழினத்துக்காக தமிழர்களுடைய விடுதலைதான் தங்களுடைய கொள்கை என்பதில் மிக உறுதியாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏதோவொரு வகையிலே தனிமைப்படுத்தவேண்டுமாக இருந்தால் அதற்கு ஏனைய அரசியல் தரப்புக்கள் அனைத்தும் தங்களுடைய எடுபிடிகளாக இருக்கவேண்டும் என்பது இலங்கை அரசினதும் இந்த சர்வதேச சக்திகளினதும்தேவையாக இருந்தது. 
 
அப்படிப்பட்ட சூழலிலே விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்த வேண்டும் தமிழ் மக்களுடைய தலமை தமிழ்மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு தலமையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கணக்குப்போட்டு இந்த ஜனநாயக அரசியல் தலமைகளை தங்களுடைய கூலிகளாக வளர்த்தெடுத்து வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் குமார் பொன்னம்பலம் அவர்கள் இவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக  தமிழ் மக்களுயைட நலன் அடிப்படையில் சிந்திக்கின்ற, செயற்படுகின்ற ஒருவராக விளங்கினார். 
 
அவரை எடுத்துக்கொண்டால் அரசியல் நிலைப்பாடுகளிலும் சரி மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடையங்களிலும் சரி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலே நீதியாக நின்று செயற்பட்டுக்கொண்டு வந்த ஒருவர். கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைகளை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசென்ற பெரும் பங்கு குமார் பொன்னம்பலத்துக்கு இருந்தது. செம்மணிப் படுகொலையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்றதில் குமார் பொன்னம்பலத்துக்கு பெரும்பங்கிருந்தது.
ஆனால் அந்தக் காலப்பகுதிகளிலே அவருக்கு ஏற்பட்டாத அச்சுறுத்தல் அரசியல் நீதியாக தமிழர்களுடைய தாயகம் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்களுயை சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டும் என அவர் உறுதியாக நிற்கின்ற பொழுது விடுதலைப் புலிகளுடைய அரசியல் நிலைப்பாடும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த அந்த மேட்டுக்குடி சூழலிலே சிந்திக்கக்கூடிய ஒருவர் வடக்குக் கிழக்குத் தமிழர்களுடைய அபிலாசையை கொழும்பிலே இருந்துகொண்டு அதுவும் தமிழர்களுடைய முதலாவது அரசியல் கட்சிான காங்கிரசின் வழி வந்த ஒருவர் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவது விடுதலைப் புலிகளுடைய போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானது அது அங்கீகரிக்கப்படவேண்டியது அதனை எந்த இடத்திலும் நிராகரித்துவிட முடியாது என்கின்ற நெருக்கடி ஏற்படுகின்ற பொழுது குமார் பொன்னம்பலத்தின் குரல்வளையை நசுக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது.
 
அந்த இடத்திலே குமார் பொன்னம்பலம் தவிர்ந்த ஏனைய தலைவர்களை நோக்குகின்ற பொழுது ஏனையவர்கள் எல்லோரும் இந்தியாவுக்கு சேவகம் செய்கின்றவர்களாக இந்தியாவின் பாதங்களைத் தடவிக்கொண்டிருப்பவர்களாக விளங்கினார்கள். அல்லது கொழும்பு அரசியல் தஞ்சமாகி அரசுடன் இணைந்த வாழ்க்கைய வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். கொழும்பு எதை நினைக்கின்றதோ அதனைச் செய்து முடிப்பவர்களாக எள் என்றால் எண்ணையாக நிற்பவர்களாக ஏனைய தலைவர்கள் எல்லோரும் இருந்தார்கள். இவர் வட்டுமே கொழும்பில் இருந்துகொண்டு சந்திரிக்காவோடு விவாதம் செய்பவராகவும் தமிழர் பிரச்சனையை ஜ.நா மன்றம்வரை கொண்டு செல்பவராகவும் இருந்தார். 
 
1952 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய வடகிழக்கு தமிழர்களுடைய  தாயகம், தேசியம்,  சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட அங்கீரிக்கப்பட்ட தமிழர் தேசம் என்பதை தீர்மானமாக எடுத்திருந்தாலும் பின்னர் வந்த தலைவர்கள் அதனைக்கைவிட்டவர்களாக அரசுகளுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்கின்ற பொழுது குமார் பொன்னம்பலமே இந்தக் கொள்கைளே தமிழர்களை வாழவைக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டு அந்த வழியிலே பயணிக்கத் தொடங்கினார் அது விடுதலைப் புலிகளுடைய அரசியல் நிலைப்பாட்டடையும் தமிழ் மக்களுடைய  அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு புள்ளியிலே சந்திக்கச் செய்த சூழலில் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாடு தமிழ் மக்களுயைட நிலைப்பாடு எனக் கூறமுடியாது என்கின்ற ஒரு சூழலில்தான் குமார் பொன்னம்பத்தின் குரல்வளை இலக்குவைக்கப்படுகின்றது. 
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரனா சந்திரிக்கா அரசாங்கத்தின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த சூழலில் அரசாங்கம் பலவீனமடைந்திருந்த சூழலில் சமாதானப் பேச்சுக்கு அரசாங்கம் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனோடு அண்டியதாக தேர்தல் ஒன்றும் வரவேண்டியிருந்து. விடுதலைப் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்டத அந்தச் சூழலில் சமாதன உடன்படிக்கை ஒன்று வரபோகின்றது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. 
 
அப்படிப்பட்ட ஒரு சூழலில் குமார் பொன்னம்பலம் அவர்கள் உயிரோடு இருப்பாராக இருந்தால் அவர்தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற ஒரு நிலை ஏற்படும் அப்படி ஏற்பட்டால் விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும். புலிகளையும் மக்களையும் பிரிக்க முடியாமல் போகும். விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுயைட தலைமைகளாகக் கொண்டுவர முடியாமல் போகும் என்ற ஒரு சூழலில் தான் குமர் பொன்னம்பலம் அவர்கள் இலக்குவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்” – என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com