கூட்டு உடன்படிக்கை விதிகளை மீறுகிறார்கள் – தேயிலை ஏற்றுமதியை முடக்கி போராட்டம்

கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் அட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தில் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

28.11.2016 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புகாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாத காலம் மேலாகியும் அக்கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளுக்கு அப்பால் போடைஸ் தோட்ட நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மாறுப்பட்ட தொழில் விதி முறைகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

“நோம்” அடிப்படையில் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தினை அதற்கும் அதகிமாக பறிக்கும் படி போடைஸ் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளது.

அதேவேளை கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் திறன் கொடுப்பனவான 140 ரூபாவை அத்தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அதேபோன்று மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்கான தொகையினையும் மறுத்திருக்கும் இத்தோட்ட நிர்வாகம் ஞாயிற்று கிழமைகளில் வழமைபோல் வழங்கப்பட்ட ஒன்றரை நாள் சம்பளத்தை தவிர்த்து கைகாசு அடிப்படையில் சம்பளத்தை வழங்க முன்வந்திருந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்திற்கும் எதிர்ப்பினை தெரிவித்த தொழிலாளர்கள் இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனடிப்படையில் இத்தோட்ட நிர்வாகத்தினரிடம் பேசப்பட்டுள்ளது. அதேவேளை கொடுக்கப்படும் கொடுப்பனவுகளை முறையாக கொடுக்காத பட்சத்தில் தொழிலாளர்களால் பறிக்கப்பட்டு தேயிலை தூள் உற்பத்தி செய்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் தேயிலை தூள் பொதிகளை தொழிற்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தை வழியுறுத்தியுள்ளனர்.

இதனை மீறி போடைஸ் தோட்ட நிர்வாகம் சுமார் 8000 கிலோ அடங்கிய தேயிலை தூள் பொதிகளை அத்தோட்டத்தின் வாகனத்தின் ஊடாக கொழும்புக்கு ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இவ்விடயம் அறிந்த தொழிலாளர்கள் அத்தோட்டத்தின் மயானபூமிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வாகனத்தை மடக்கி பிடித்து நிறுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு கொண்டு வந்த அதேவேளை தொழிலாளர்கள் 28.11.2016 அன்று பணிக்கு திரும்பாமல் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் மகளிர் பிரிவு இணைப்பாளர் அருள்நாயகி உள்ளிட்ட காங்கிரஸின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் தோட்ட தொழிலாளர்களுடனும், நிர்வாகத்தினருடனும் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டனர்.

அதன்போது தேயிலை பொதிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை தோட்ட தொழிற்சாலையில் பாதுகாப்பாக நிறுத்தும்படியும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டியதன் பின் இத்தேயிலை பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும் இவர்களால் வழியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரியிடம் வினாவியபோது, தொழிலாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் இ.தொ.கா எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனக்கு ஏதும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் வழமைபோல் தேயிலை பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்லும் நடவடிக்கையில் தாம் ஈடுப்பட்டதாக அவர் தெரிவித்தார். சரியான தீர்மானம் அல்லது எடுக்கபட்ட முடிவு இ.தொ.கா மூலம் எனக்கு தெரியப்படுத்திருந்தால் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் செயற்படாத அனைத்து தோட்டங்களிலும், இவ்வாறான முறுகல் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

dsc04343 img_5554 vlcsnap-2016-11-28-13h59m58s194 vlcsnap-2016-11-28-14h00m53s226 vlcsnap-2016-11-28-14h01m08s109

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com