சற்று முன்
Home / செய்திகள் / குழப்பகரமான தகவல்களைப் பரப்ப வேண்டாம் – உறுதிப்படுத்திய தகவல்களை யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிடும் – மாவட்டச் செயலாளர் அறிவிப்பு

குழப்பகரமான தகவல்களைப் பரப்ப வேண்டாம் – உறுதிப்படுத்திய தகவல்களை யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிடும் – மாவட்டச் செயலாளர் அறிவிப்பு

“அரியாலை மத வழிபாட்டுத் தலத்தில் மத நிகழ்வில் பங்கேற்ற போதகருக்கு கோரோனா வைரஸ் அறிகுறி குறித்த தகவலையடுத்து அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவினரால் உடனுக்குடன் வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா தொடர்பான செய்திகள் பலதரப்பட்ட முகநூல்களில் பகிரப்பட்டுவருவதும் ஊடகங்கள் தெரிவித்து வருவதும் மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மதவழிபாட்டுத் தலம் ஒன்றில் பங்குகொண்ட மத போதகருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்தமையால் அந்த வழிபாட்டு நிகழ்வில் பங்குகொண்ட ஏனையோருக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அந்த மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இன்று பிற்பகல் ஒரு மணிவரை குறித்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அந்த மத வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் அவர்களது முற்பாதுகாப்பினையும் மற்றும் சமூகப்பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது 021 2217278 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவினரால் உடனுக்குடன் வழங்கப்படும் என்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பொது நிகழ்வுகள், மற்றும் பொது மக்கள் நடமாட்டம் என்பவற்றை சமூகப் பொறுப்புக் கருதி கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com