“குழந்தைகளுக்காய் இரங்குங்கள்“ – ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்ப பொது அமைப்புக்களுக்கு அழைப்பு !!

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணைமனுக்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்டவல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்த்திட்டம் இன்று காலை பத்துமணிக்கு விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இவ் செயற் திட்டத்திற்கு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமாலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இச் செயற்த்திட்டமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கருணைமனு க்கள் பொதுஅமைப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னன்சல் மூலமாகவும் அனுப்பி கையெழுத்து இடப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செயற் திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.

அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயர்களை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் துயிர் நிகழ்வு.

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.

இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த 15ஆம் நாள் நோயுற்ற நிலையில் மரணமானார்.

கிளிநொச்சி மருதநகரில் நேற்று நடந்த மனைவியின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 3 மணிநேரம் அனுமதிக்கப்பட்டார் ஆனந்தசுதாகர்.

பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட அவர் மனைவியின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தியதுடன், தனது பிள்ளைகள் இருவருடனும், துயரைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதி நிகழ்வுக்குப் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பேருந்தில் ஏற்றும் போது, ஆனந்தசுதாகரின் மகளும் அந்த வாகனத்தில் ஏறிய காட்சி அங்கிருந்தவர்களை மாத்திரமன்றி, அதுபற்றிய படங்களை ஊடகங்களில் பார்த்த உலகெங்கும் உள்ள தமிழர்களையும் கலங்க வைத்துள்ளது.

தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் அந்தரித்து நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com