குற்றம் நிரூபணமானால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள் – வித்தியா கொலைச் சந்தேக நபர்

புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது தெரியவந்தால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள் என முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஒன்பது சந்தேக நபர்களினதும் , விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மிப்பதனால், மேலும் காலத்தை நீடிப்பு செய்வதற்காக குறித்த ஒன்பது சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது 4ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசீந்திரன் , 7ம் சந்தேக நபரான பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 9ம் சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கமே மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

தனது பிணை விண்ணப்பத்தில் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 4ம் , 7ம் , 9ம் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜார் ஆகின்றேன். யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் எவரும் இந்த வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலை ஆக மாட்டோம் என முடிவெடுத்து உள்ளதனால் , நீதி நியாயத்தை நிலை நாட்டும் பொருட்டு சந்தேக நபர்கள் சார்பில் நான் முன்னிலை ஆகின்றேன்.

குறித்த மூன்று சந்தேகநபர்களும் நீண்டகாலமாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்கள் அவர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மித்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பம் கஷ்டங்களை எதிர்நோக்கு கின்றன.

குறித்த மூன்று சந்தேக நபர்களும் சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் கொழும்பில் வாசித்துள்ளார்கள். ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்தவர்.

இவர்கள் மூவரும் கொழும்பில் இருந்தமைக்காக சி.சி.ரி.வி. கமரா பதிவுகள் , வங்கியில் பணம் மீள பெற்றமைக்கான ஆதாரம் , ஹோட்டலில் சாப்பிட்டமைக்கான ஆதாரம் , சாட்சியங்கள் உள்ளன. அவை தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து சாட்சி ஆதாரங்கள் தொடர்பிலான அறிக்கைகளையும் பெற்று உள்ளனர்.

இவர்கள் மூவரும் சம்பவம் இடம்பெற்ற திகதிக்கு பின்னர் மாணவியின் இறுதி கிரியைக்காக தான் புங்குடுதீவு வந்தனர்.

இவர்களும் இந்த கொலைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த விதமான தொடர்பும் இல்லை அதனால் இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினார்.

அதனை தொடர்ந்து மேல்.நீதிமன்ற நீதிபதி ஏனைய சந்தேக நபர்களிடம் உங்கள் சார்பில் சட்டத்தரணி எவரேனும் முன்னிலை ஆகின்றார்களா ? என சந்தேக நபர்களிடம் கேட்டார்.

அதற்கு அவர்கள் தம் சார்பில் முன்னிலை ஆக சட்டத்தரணிகள் எவரும் சம்மதிக்கின்றார்கள் அல்ல என கூறினார்கள். அதனால் சந்தேகநபர்கள் பிணை கோரி தாமே விண்ணப்பம் செய்ய நீதிபதி அனுமதித்தார்.

அதன் போது,

முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் ,

தான் இந்த கொலையை செய்யவில்லை என்றும் தானே இந்த கொலையை செய்தேன் என நீதிமன்றில் நிரூபணமானால் நாலு சுவர்களுக்கு மத்தியில் தூக்கிலிடாமல் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடுங்கள் என்றார்.

இரண்டாவது சந்தேக நபரான கோபாலசிங்கம் ஜெயக்குமார் ,

இந்த கொலையை நான் செய்யவில்லை . பொலிசாரும் , புலனாய்வு  பிரிவினரும் அடித்து துன்புறுத்தி இந்த கொலையை செய்ததாக ஒப்புக் கொள்ள சொன்னார்கள். நான் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள மாட்டேன் என மறுத்து விட்டேன். என்றார்.

மூன்றாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் தவக்குமார்,

இந்த கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களும் நானும் சகோதரர்கள்.

சம்பவம் நடைபெற்ற தினமான கடந்த ஆண்டு மே மாதம் 13ம் திகதி காலை 8 மணிக்கு புங்குடுதீவில் உள்ள வீடொன்றில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அதனை உயிரிழந்த மாணவியின் அண்ணனும் கண்டார்.

பொலிஸ் என்னை கைது செய்து கட்டி தூக்கி அடித்தார்கள், மிளாகாய் தூள் தூபினார்கள் ,இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள் என சித்திரவதை செய்தார்கள். என்றார்.

ஐந்தாவது சந்தேக நபரான தில்லைநாதன் சந்திரகாந்தன் ,

இந்த குற்றத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பொலிசார் கைது செய்து கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி, அரச மரம் ஒன்றில் கட்டித்தூக்கி தாக்கினார்கள். கண்ணுக்குள் மிளகாய் தூள் தூபினார்கள். இந்த குற்றத்தை ஒப்புக்கொள் என்று.

உனக்கும் ஒரு தங்கை உண்டு. அவளுக்கும் இதை விட மோசமாக நடக்கும். இந்த குற்றத்தை ஏற்றுக் கொள் என்றார்கள்.

ஊர்காவற் துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் தமிழ் பொலிசார் எம்மை சிங்களத்தில் கதைக்க வேண்டும் நான் சிங்களத்தில் மொழி பெயர்ப்பேன் என கூறி எங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கூட்டி சென்று , இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார்கள் என நாம் கூறாத விடயத்தை சிங்களத்தில் கூறினார்.

அதனை அடுத்து அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி எம்மை தாக்கினார். இதுவரை நான் கேட்ட போது ஒப்புக் கொள்ளாத நீங்கள் அவன் தமிழ் என்ற படியால் ஒப்புக் கொண்டு உள்ளீர்கள் நான் சிங்களம் என்றதனால் ஒப்புக் கொள்ள வில்லை என்ன என்று கேட்டு எம்மை தாக்கினார்.

பின்னர் நான்காம் மாடிக்கு எம்மை கொண்டு சென்று அங்கு வைச்சும் என்னை தாக்கினார்கள். கண்ணுக்கு மிளகாய் தூள் போட்டார்கள். நீ அரசதரப்பு சாட்சியாக மாறு உன்னை வெளியில் விடுகின்றோம். உனக்கு நாங்கள் பாதுகாப்பு தருவோம் நீ பயபடாதே என கூறினார்கள்.

அதற்கு நான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறினேன்.  அதனால் மீண்டும் அடித்தார்கள் என் கால் நகத்தை அடித்து சிதைத்தார்கள்.  அதனை இப்ப வேண்டும் என்றாலும் நீங்கள் பார்க்கலாம்.  நான் இந்த குற்றத்தை செய்ய வில்லை என்றார்.

ஆறாம் சந்தேக நபரான சிவதேவன் துஷாந்தன்,

சம்பவம் நடைபெற்ற 13ம் திகதி வேலணை பிரதேச சபையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். காலை 8.10 மணிக்கு கையொப்பம் இட்டு உள்ளேன்.

17ம் திகதி பொலிசார் என்னை கைது செய்து குறிக்கட்டுவானில் உள்ள பொலிஸ் காவலரணில் தடுத்து வைச்சு தாக்கினார்கள். கட்டி தொங்க விட்டு அடித்தார்கள். மிளகாய் தூள் தூபினார்கள் நிர்வாணமாக நடக்க விட்டும் சித்திரவதை செய்தார்கள்.

பின்னர் நான்காம் மாடிக்கு கொண்டு சென்று நீ அந்த பிள்ளையை காதலிச்ச நீ அதனை அவள் ஏற்காது செருப்பால் அடித்தமையால் நீ இந்த குற்றத்தை செய்து உள்ளாய் என்று கூறினார்கள்.

அதற்கு நான் அந்த பிள்ளைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினேன். அப்போது என் ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடித்தார்கள்.

பிறகு ஆறாம் மாடிக்கு கொண்டு சென்றும் அங்கு  வைச்சும் என்னை தாக்கினார்கள். பின்னர் அரச தரப்பு சாட்சியாக மாறு உன்னை விடுதலை செய்கின்றோம் என்றார்கள். நான் செய்யாத குற்றத்தை ஏற்க மாட்டேன் என கூறினேன். என்றார்.

எட்டாவது சந்தேக நபர் ஜெயதரன் கோகிலன் ,

எனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை 4ம் , 7ம் , மற்றும் 9ம் சந்தேகநபர்களுடன் சம்பவம் இடம்பெற்ற தினமான 13ம் திகதி நான் கொழும்பில் இருந்தேன்.

அதற்கான சாட்சி ஆதாரங்கள் தற்போது குற்ற புலனாய்வு பிரிவினரிடம் உள்ளது. நாம் கொழும்பில் நின்ற கால பகுதியில் உயிரிழந்த மாணவியின் பெரியம்மாவின் மகனின் முச்சக்கர வண்டியிலையே பயணம் செய்வோம். அதனால் அவருக்காவும் , சம்பவம் இடம்பெற்றது எனது தாய் ஊரான புங்குடுதீவில் என்பதனாலும் மாணவியின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக புங்குடுதீவு வந்து இருந்தோம்.

இறுதி கிரியைகள் எல்லாம் முடிந்த பின்னர் 17ம் திகதி நாங்கள் மீண்டும் வாகனம் ஒன்றில் கொழும்பு நோக்கி செல்வதற்காக இருந்த வேளை ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் சசிக்குமார் என்பவரை ஊர்காவற்துறை பொலிசார் வருமாறு அழைத்து இருந்தார்கள்.

அவருக்கு சிங்களம் தெரியாத காரணத்தாலும் , நாம் அனைவரும் ஒன்றாக இருந்த காரணத்தாலும் நாமும் அவருடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதே பொலிசார் எம்மை கைது செய்தனர். பின்னர் அடித்து சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக் கொள்ள சொன்னார்கள்.

முதலில் நாமே இந்த குற்றத்தை செய்தோம் என கூறினார்கள். தற்போது அந்த கொலையை மறைப்பதற்கு உதவினோம் என்கிறார்கள் என்றார்.

குறித்த சந்தேக நபர்களின் விண்ணப்பத்தை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கையில் ,
குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் முற்று பெறாததால் மேலும் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டிய கடப்பாடு இருப்தனாலும் , விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய கடப்பாடு மேல் நீதிமன்றுக்கு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படுகின்றது என்றார்.

விசாரணையை துரிதப்படுத்த பணிப்பு.

அதேவேளை குற்ற புலனாய்வு பிரிவினர் தமது விசாரணையை விரைந்து நடாத்தி பூர்த்தி செய்வதற்கு மேல் நீதிமன்றம் பணிகின்றது.

ஊர்காவற் துறை நீதவான் நீதிமன்ற நீதிபதியுடன் விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் பாரப்படுத்த வேண்டும். என மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

சிறைச்சாலை வாகனத்தினுள் இருந்து கத்துவதனால் பயனில்லை.

சந்தேகநபர்கள் சிறைச்சாலை வாகனத்தினுள் இருந்து கருத்து தெரிவிப்பது கத்துவதனால் எந்த பயனும் இல்லை. ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதனை நீதிமன்றில் தெரிவியுங்கள்.

அதேபோல சந்தேக நபர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முரண்பட கூடாது. இவ்வாறான விடயங்களால் உங்களுடைய பிணை விண்ணப்பங்கள் எதிர்காலத்திலும் நிராகரிக்கப்படலாம். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com