குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – மகரம்

1010. மகரம்

மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிஞர்களின் நட்பால் மனத் தெளிவு கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடையில் மரியாதை கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர் கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். வழக்கு சாதகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமையல றையை நவீனமாக்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சப்தமாதிபதி யான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். வீடு, வாகன வசதி பெருகும்.

உங்கள் சுகாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். தாயாரின் உடல்நலம் சீராகும். அவருடனான மன வருத்தங்கள் நீங்கும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 10-ம் வீட்டில் குரு அமர்வதால், வேலைச்சுமை அதிகமாகும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன அவமானம் ஏற்படக்கூடும். வீண் பழி ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அடிக்கடி ஒரு தேக்க நிலை உண்டாகும். அவ்வப்போது இனம் தெரியாத கவலை வாட்டும். வயிறு தொடர்பான உபாதைகள் வந்து போகும்.

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆடை வடிவமைப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

மாணவ-மாணவிகளே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள்.

கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த குரு மாற்றம் தோல்வியால் துவண்டு கிடந்த உங்களுக்கு ராஜயோகத்தைத் தருவதுடன், எங்கும் எதிலும் வெற்றி வாகைசூட வைக்கும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம் பரவை எனும் ஊரில் வீற்றிருக்கும் முத்து நாயகி அம்மனை வெள்ளிக் கிழமையில் மல்லிகைப்பூ மாலை தந்து வணங்குங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds