குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – தனுசு

909. தனுசு

வளைந்து கொடுக்கத் தெரியாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும்.

குருபகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் அட்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, ரத்த சோகை, கண் வலி வந்து போகும்.

உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், மனோபலம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணிக்கு, வங்கிக் கடன் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.2017 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ், சிமென்ட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் கூடுதல் வேலை கொடுத்தாலும் சலிக்காமல் முடித்துத் தருவது நல்லது.

மாணவ-மாணவிகளே! சாதிக்கவேண்டு மானால் ஊக்கத்துடன் படிக்கவேண்டும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் அவசியம். சிலரின் சிபாரிசு பெற்றே விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். மூத்த கலைஞர்களின் நட்பால் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடின உழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனை யாலும் புதிய அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருளும் சிம்மகுரு தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமை அல்லது தசமி திதியில் கொண்டைக் கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். தடைகள் விலகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds