குருபெயர்ச்சி பலன்கள் – மகரம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

இரட்டை சிந்தனை உடைய நீங்கள் மற்றவர்களை வழிநடத்துவதில் வல்லவர்கள் ஆனால்,  தன் விஷயம் என வரும் போது தடுமாறுவீர்கள். தோல்வி தீயில் சாம்பலாகாமல் பீனீக்ஸ் பறவை போல உயிர்த்தெழுபவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் அமர்ந்து திடீர் யோகங்களையும், பணவரவையும், வி.ஐ.பிகளின் நட்பையும் பெற்றுத் தந்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 10ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! சேமிப்பு இல்லாமல் போகுமே! என்றெல்லாம் யோசித்து குழம்பாதீர்கள். ஓரளவு நல்லதே நடக்கும். திட்டமிட்ட வேலைகள் முடியாவிட்டாலும், திட்டமிடாத வேறு சில காரியங்கள் முடிவடையும்.

என்றாலும் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உங்கள் திறமைக்கான அங்கீகாரமோ, பாராட்டுகளோ இருக்காது. சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாட்டிற்கும், வேற்றுமாநிலம் சென்று வேலை பாா்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.

குருபகவானின் பார்வை:  

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை குரு தனது ஏழாம் பார்வையால் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம்.
குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 6ம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். குறை கூறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பிக் கொண்டிருப்பவர்களையும் தவிர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் சுகலாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரங்களின் மனசு மாறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகன வசதிப் பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும், மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம் கூடி வரும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். உங்களின் விரயாதிபதிபதியும் திருதியாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவன்  மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரிகளே! வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். சிமென்ட், மரம், கடல் வாழ் உயிரினங்கள், இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார். அதிகாரிகள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். படிப்பில் தடை வரக்கூடும். உங்களுடைய கல்விக்கு ஏற்ற வேலை அமையாமல் வேறு துறையில் கிடைக்கும். எனவே ஏற்றுக் கொள்ளப்பாருங்கள்.

மாணவ  மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விளையாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டிருக்கும். சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விவசாயிகளே! உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். நிலத்தின் தன்மையறிந்து பயிரிடுங்கள். பயிர் வகைகள், சவுக்கு, தென்னை வகைகளால் லாபம் உண்டு. இந்த குரு மாற்றம் ஏற்றத் தாழ்வுகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் சகிப்புத் தன்மையால் ஓரளவு மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்: 

ஈரோடுக்கு அருகேயுள்ள தாராபுரம் அகத்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com