குருபெயர்ச்சி பலன்கள் – தனுசு (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பதுபோல் தன்மான சிங்கங்களாய் விளங்கும் நீங்கள் அநாவசியமாக யாருக்கும் தலைவணங்க மாட்டீர்கள். கறைபடியாத களங்கமில்லாத மனசு கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் தொழில் ஸ்தானமான 10ம் இடத்தில் அமர்ந்துகொண்டு தர்ம சங்கடமான சூழல்களையும், உங்களைப்பற்றிய வதந்திகளையும், மறைமுக அவமானங்களையும், உத்யோகத்தில் ஆர்வமின்மையையும், இடமாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 11ம் வீட்டில் தொடர்வதால் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி ஒளிமயமாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாக வளம் வருவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குருபகவானின் பார்வை:  

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதிமொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் மகளின் திருமணத்தை வெகு விமரிசையாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மாற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 7ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு புதுவேலை அமையும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். அக்கம்  பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், ரத்னங்கள் வாங்குவீர்கள். சிலர் புதுத்தொழில் தொடங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் பூர்வ புண்யாதிபதியும், விரயாதிபதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பூர்வீகச் சொத்தை அழகுபடுத்தி, விரிவு’படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பயணம் உண்டு. 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவி கிடைக்கும். நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வீட்டை இடித்துப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அடுத்தடுத்த சுபச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப்போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனை கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வாகனம் அடிக்கடி பழுதாகும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். முதுகுத் தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்துபோகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரிகளே! பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். விலகிச்சென்ற பழைய வேலையாட்கள் மீண்டும் வந்து இணைவார்கள். நகை, ஜவுளி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், கண்சல்டன்சி வகைகளால் முன்னேற்றம் உண்டு. வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். கடை வாடகை அதிகமாகிக் கொண்டேப் போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிகள் தேடி வரும். சந்தையில் மரியாதை கூடும். அரசு கெடுபிடிகள் தளரும்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவருக்கு பல ஆலோசனைகளும் தருவீர்கள். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன உத்தரவு பெறாமல் இருந்தீர்களே! இப்போது அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களே! உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாசமழைப் பொழிவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

மாணவ  மாணவிகளே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாசஸ் சென்று வருவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் அயல்நாட்டிற்குச் சென்று உயர்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும்.

அரசியல்வாதிகளே! சமயோஜித புத்தியாலும், காரசாரமான பேச்சாலும் எதிர்க்கட்சியினரை திணறடிப்பீர்கள். வருமானம் கூடும். தேர்தலில் வெற்றி கிடைக்கும். சில வி.ஐ.பிகளும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள்.

கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விருதுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். ஆகமொத்தம் இந்த குருமாற்றம் தோல்விகளால் துவண்டு கிடந்த உங்களை கரைத்தேற்றுவதுடன், சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.

பரிகாரம்: 

சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com