குருபெயர்ச்சி பலன்கள் – சிம்மம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

ஈரமான மனசுடன் எப்பொழுதுமே வாழவேண்டுமென என்ற எண்ணமும், நம்பி வந்தவர்களை கைவிடாது, நல்லதே நினைக்கவேண்டுமென்ற குணமும் கொண்ட நீங்கள், கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து கொண்டு காரிய சித்தியையும், பணவரவையும், குடும்பத்தில் சந்தோஷத்தையும் அள்ளித் தந்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளப்பாருங்கள். உணர்ச்சிவசப்படாமல் உயர்வதற்கான வழியை சிந்தியுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

குருபகவானின் பார்வை: 

குரு தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். கணவன்  மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். உங்களின் 9ம் வீட்டை குருபகவான் தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். பிதுர்வழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் உண்டு. குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சொந்தஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் சுகபாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். நகர எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் புதிதாக வீடு வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். அவருடனான மோதல்களும் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களின் அஷ்டம பூர்வ புண்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது. திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் குருபகவான் செல்வதால் குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்லவும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. எதிர்மறை சிந்தனையுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வரும். தாயாரை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் அடிமனதில் வந்துபோகும். குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்காக உறுதிமொழி தர வேண்டாம். அநாவசியமாக அடுத்தவர்கள் குடும்ப விவகாரத்தில் தலையிடாதீர்கள். நியாயத்தைப் பேசப் போய் பெயர் கெடும். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன் வந்துசெல்லும். ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும்.

வியாபாரிகளே! பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பணம் பட்டுவாடாக்களை நீங்களே நேரடியாக சென்று செய்யுங்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோகெமிக்கல், கிஃப்ட்ஷாப் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை முதலில் மறுத்தாலும் கடைசியாக ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாகும்.

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்து கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்து விடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித் தள்ளுங்கள். இரும்பு, கால்சியச் சத்து உடம்பில் குறையும். மேலை நாட்டு உணவைத் தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மாணவ  மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். தொடக்கத்திலிருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் பெற முடியும். அலட்சியமாக இருந்தால் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் அதிகப் பணம் கொடுத்து, சிலரின் சிபாரிசில் சேர வேண்டி வரும். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும், வதந்திகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். என்றாலும் கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விவசாயிகளே! எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். மக்காச்சோளம், துவரை, கரும்பு லாபம் தரும். ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை ஆழம்பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: 

சேலத்திற்கு அருகேயுள்ள கஞ்சமலை சித்தேஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com