குருபெயர்ச்சி பலன்கள் – கும்பம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

மற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், கலகலப்பாக சிரித்துப் பேசி எதிரியையும் தன்வயப்படுத்துவீர்கள். தளராத தன்னம்பிக்கை உடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், தோல்விமனப்பான்மையால் மனயிறுக்கத்தையும், சின்னச் சின்ன ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேறும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதூர்யமாக தீர்ப்பீர்கள்.

உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் உறவினர், நண்பர்கள் மத்தியில் அதிகரிக்கும். கடன் பிரசனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். சரியான தூக்கமில்லாமல் தவிர்த்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! குருபகவானின் பார்வை:  குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வெளி வட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டைப் பார்ப்பதால் சபைகளில் மதிக்கப்படுவீர்கள். தைரியம் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகளின் நட்பு கிட்டும்.
குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் தன பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சாத்வீகமான எண்ணங்கள் வரும். விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். உங்களுக்குள் ஒரு சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஒருவித தயக்கம், தடுமாற்றம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வுமனப்பான்மை வந்துசெல்லும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நரம்புச் சுளுக்கு, மூச்சுத் திணறல் வந்துபோகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும். உங்களின் தனலாபாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். திருமணமும் கூடி வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள், இடமாற்றங்கள் வரக்கூடும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வதந்திகளை நம்பி உறவுகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். பாஸ்போட்டை புதுப்பிக்க தவறாதீர்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்டு இவற்றையெல்லாம் கவனக் குறைவால் இழந்துவிடாதீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்துக் கொள்வீர்கள். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத்துடனோ நடந்து கொள்ளவில்லை எல்லோரும் நடிக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரிகளே! தேக்க நிலை மாறும். ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். புது முதலீடுகள் செய்வீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்பு வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்து கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். வேலை கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

மாணவ  மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கட்சியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! உங்கள் கடன் தள்ளுபடியாகும். புதிய சலுகைகளும் கிடைக்கும். ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். இந்த குரு மாற்றம் வெற்றி பாதையில் விஜயம் செய்ய வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் வாரித் தருவதாக அமையும்.

பரிகாரம்: 

விருத்தாசலத்தில் அருளும் விருத்தகிரீஸ்வரரை தரிசியுங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com