குருபெயர்ச்சி பலன்கள் – கன்னி (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளை அழகாக வாழ கற்றுக் கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையையே விரும்புவீர்கள். நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து கொண்டு உடம்பையும், மனசையும் பலவீனமாக்கினாரே! எந்த ஒரு காரியத்திலும் பின்னடைவையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தினரே! இப்படி பல வகையிலும் உங்களுக்கு தடைகளையும், மனஉளைச்சல்களையுமே தந்து உருகுலையச் செய்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களுக்கு புது தெம்பு வரும்.

குருபகவானின் பார்வை: 

குரு தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். விசா பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களின் 8ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.

அக்கம்பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் நன்மை உண்டாகும். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். புது பதவி, பெரிய பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வேலைச்சுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். சிலர் இருசக்கர வாகனத்தை தந்து விட்டு கார் வாங்குவீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது. சகோதர வகையில் மனவருத்தங்கள் வந்துசெல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.

உங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கணவன்  மனைவிக்குள் விவாதங்கள் வந்துசெல்லும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, ஃபைப்ராய்டு பிரச்னைகள் வந்துசெல்லும். சிலர் உங்களைப் பற்றி அவதூறுப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சிறுசிறு அவமானம் ஏற்படும். உத்யோகத்தில் இடமாற்றம் வரக்கூடும். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களைப்பற்றி விவாதிக்க வேண்டாம். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன்  மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

வியாபாரிகளே! சில மாற்றங்கள் செய்வீர்கள். உப்பு விற்க போனால் மழைப் பொழிந்தது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் எதை தொட்டாலும் அது நட்டத்தில் சென்று முடிந்ததே! அந்த நிலையெல்லாம் மாறும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வாராக் கடன்கள் வசூலாகும். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கன்ஸ்ட்ரக்சன் வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவீர்கள். பணியும் நிரந்தரமாகும்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டகால கனவுகளெல்லாம் நனவாகும். சோர்வு, களைப்பு, அலர்ஜி, இன்ஃபெக்ஷன் நீங்கும். சிலர் தடைப்பட்டிருந்த உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். திருமணம் முடியும்.

மாணவ  மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளிலும் கலந்து  கொண்டு வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண்ணும் உயரும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் ரிலீசாகி புகழடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

விவசாயிகளே! 
வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். மரப்பயிர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆகமொத்தம் இந்த குரு பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நெடுங்கால கனவுகளையெல்லாம் நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்: 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com