கீரிமலையில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் முயற்சி ஒட்டுமொத்த இந்துக்களைமட்டுமல்ல ஏனைய மதத்தவர்களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடு

CM-1கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை பற்றியும் இப் பிரதேசத்தின் புனிதம் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் எமது மத்திய அரசின் அரசியல் தலைமைகள் இங்கு ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு சினத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இச்செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் ஏன் ஏனைய மதத்தவர்களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடாக அமைந்திருப்பது இங்கு பேசற்பாலது என தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இந்துமா மன்றத்தின் அனுசரணையில்
கீரிமலை சிவபூமி மடத்தில் 02.08.2016 செவ்வாய்க்கிழமை
ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில்
நுடைபெற்ற நீத்தார் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளரர். அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,

பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………………………………
இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களே, நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகா சந்நிதானம் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களே, எமது மதிப்பிற்குரிய பிரதிக் கல்வி அமைச்சர் கௌரவ இராதாகிருஷ்ணன் அவர்களே, ஆரம்ப உரை நிகழ்த்துவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்திருக்கும் இந்துமா மன்ற உப தலைவர் நண்பர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களே, மற்றும் இங்கே மேடையில் வீற்றிருக்கும் அறிவுசார் பெருமக்களே, மேடைக்குக் கீழ் வீற்றிருக்கும் அறிவுசார் பெருமக்களே, இந்துசமய பெரியோர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே, மாணவ மாணவியரே!
இன்று ஒரு புண்ணிய தினம். இந்த ஆடி அமாவாசை தினத்தில் தந்தையர்களை இழந்தவர்களும், ஆண் உறவுகளை இழந்தவர்களும், தமது உறவுகளை நினைவு கூர்வதற்கும் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குமாக விரதம் இருந்து வழிபாடுகளை இயற்றக்கூடிய ஒரு பொருத்தமான தினமாக இந்த ஆடி அமாவாசை தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபாட்டு நிகழ்வுகள் வருடா வருடம் இயற்றப்பட்டு வருகின்றன. இத் தினத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மன மகிழ்வடைகின்றேன்.
வருடத்தின் அனைத்து பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வருகின்ற போதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு ஏன் இந்த மகத்துவம் என நாம் எண்ணக்கூடும். ஒரு வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதி உத்தராயன காலம் எனவும் ஆடி அமாவாசையில் இருந்து தைப்பொங்கல் வரையான காலப்பகுதி தட்சணாயின காலம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்த தட்சணாயின காலப் பகுதியில்த் தான் இறந்தவர்களின் பிதிர்கள் பூலோகத்தில் சஞ்சரிக்கும் எனவும் அவற்றை சாந்தப்படுத்தி சொர்க்கத்தில் அமைதியுறச் செய்வதற்காக ஒரு வழிபாட்டு முறைமையாகவே இந்த ஆடி அமாவாசை தின வழிபாடுகள் இயற்றப்பட்டுள்ளன. எம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கும் பிதிர்களுக்கும் ஒரு நாள் என்று கூறுவார்கள். ஆடி அமாவாசை காலம் அவர்களுக்கு இரவு காலத் தொடக்கம் என்பார்கள். இக் காலத்தில் பிதிர்கள் வெளியில் சஞ்சரிக்கின்றன. ஆகவேதான் அவர்களின் நல்லாசி வேண்டி இந்த விரதம் அனு~;டிக்கப்படுகின்றது.
அமாவாசை தினத்தன்று சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வருவன. அன்றைய தினத்தில் கோள்களுக்கிடையேயான ஈர்ப்பு சக்திகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பிதிர்களின் வருகையும் அதிகமாக இருக்கும் எனவும் நம்பப்படுகின்றது. இவ்வாறாக ஆடி அமாவாசைக்கு இருக்கக் கூடிய பெருமைகளை உணர்ந்துகொண்டே நாம் அனைவரும் இன்று இப் புண்ணிய தினத்தில், இறந்துபோன எமது முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக வழிபாடுகளை இயற்றுகின்றோம். விரதமும் அன்னதானமும் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன. எம்மை வருத்தி, எமது உணவை நிறுத்தி, விரதம் இருந்து வகையற்றோருக்கு, வறியவர்களுக்கு வயிறாற உண்ண வழிவகுப்பதால் நாங்கள் இறையாசியைப் பெறுகின்றோம். அத்துடன் இறந்தவர்களின் நல்லாசியையும் பெறுகின்றோம். தர்ப்பணம் செய்வது இறந்தவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்காக. விரதமும் அன்னதானமும் அவர்களின் ஆசி கிடைப்பதற்காக.
இவ் வழிபாடுகளை இயற்றுவதற்கு மிகப் பொருத்தமான இடமாக கீரிமலை புண்ணிய தீர்த்தம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இன்றைய நிகழ்வின் இன்னோர் சிறப்பம்சம் ஆகும். புராண வரலாறுகள் கூறுகின்ற மிகப் புண்ணிய தீர்த்தமாக விளங்கக்கூடிய இந்த கீரிமலை தீர்த்தத்தில் நீராடியதால் கீரிமுகம் படைத்த முனிவரின் முகம் மாறி மனித முகத்தை அவர் பெற்றுக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே நகுலேஸ்வரம் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாகவும் வரலாறு. அதுமட்டுமல்லாது சோழ மகாராஜனின் மகளான மாருதப்புரவீகவல்லி இப் புனித தீர்த்தத்தின் மகிமையை அறிந்துகொண்டு இந்தியாவில் இருந்து இங்கே வருகை தந்து இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி தனது குதிரை முகம் நீங்கப் பெற்று அழகிய உருவத்தை அடைந்தார் எனவும் கூறப்படுகிறது.
அதற்கு நன்றிக் கடனாக மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் இராஜகோபுரத்தை இலங்கையில் உள்ள ஆலயங்களில் முதலாவது இராஜ கோபுரத்தை பெற்ற ஆலயம் எனப் பெயர் விளங்கக்கூடிய வகையில் அவர் அன்று அமைத்துக் கொடுத்தார் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கையைப் பாதுகாக்கும் ஈஸ்வரங்கள் ஐந்து. நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன. தொண்டீஸ்வரத்தில் வி~;ணு னுழனெசய என்ற இடத்தில் தற்போது வழிபடப்பட்டாலும் அங்கு பாரிய ஒரு லிங்கம் ஆழ் நிலத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அங்கிருந்த கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
இலங்கையில் உள்ள மேற்படி ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான எங்கள் நகுலேஸ்வரம் அதன் புனிதம் கெடாது பாதுகாக்கப்படவேண்டிய ஒரு சைவ சமய அடையாளச் சின்னமாகும். இத்தலத்தையும் இதனை சூழவுள்ள பகுதிகளையும் நாம் போற்றிப் பாதுகாப்பதற்கும் அதன் புனிதத்தை பேணுவதற்குந் தவறிய காரணத்தினாலேயே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப்பகுதிக்கு பொது மக்கள் ஒருவரும் வரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும் ஒருசில புண்ணிய புரு~ர்களின் வழிபாடுகளாலும் எதிர்பார்ப்பாலும் இன்று இப்பகுதிக்கு அடியவர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு பிரதேசமாக இது மாற்றப்பட்டிருக்கின்றது. எனவே இந்த புண்ணிய பூமியை அதன் புனிதம் குன்றிவிடாது பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் தார்மீகப் பொறுப்பாகும்.
கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை பற்றியும் இப் பிரதேசத்தின் புனிதம் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் எமது மத்திய அரசின் அரசியல் தலைமைகள் இங்கு ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு சினத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் மிகப் பிரபல்யமானதும் இயற்கை துறைமுகமுமாகிய மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை தமது தேவைக்கும் இராணுவப் பயன்பாட்டிற்கும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் கபட நோக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறிடத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்கான வாழ்வாதார செயற்பாடான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குப் பெயரளவில் ஒரு துறைமுகம் அமைத்துக் கொடுக்க வேண்டியுமே மத்திய அரசு எதுவித கலந்துரையாடல்களோ அல்லது சமூகம்சார் விழிப்புணர்வுகளோ அற்ற நிலையில் கீரிமலைப் பிரதேசத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயன்றுள்ளது. இச்செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் ஏன் ஏனைய மதத்தவர்களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடாக அமைந்திருப்பது இங்கு பேசற்பாலது.
இந் நிலையில் எம்மவர்களில் சிலர் தொலைக்காட்சிகளினூடாக ‘ஒப்புக்கு மாரடிக்க’ முயல்வது வேதனைக்குரியது. “புனிதம் கினிதம் என பேசிக் கொண்டிருக்காதீர்கள். இப்பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மீன்பிடித் துறைமுகம் அவசியம். எனவே கீரிமலை மீன்பிடித் துறைமுகம் எதுவித மறுதலிப்புக்களும் இன்றி அமைக்கப்பட வேண்டும்”; என ஒரு மிகக் கீழ்த்தரமான அறைகூவல் ஒளிபரப்பு இரண்டொரு நாட்களுக்கு முன் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது என்று எனக்குக் கூறப்பட்டது. மக்களோடு மக்களாக வாழாதவர்கள் இப்பேர்ப்பட்ட பாரிய தவறுகளைச் செய்கின்றார்கள். சரித்திரம் அறியாதவர்கள் இப்பேர்ப்பட்ட தவறுகளை இழைக்கின்றார்கள்.தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தமது மக்களையே விலை பேசத் துணிகின்றார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இவ்வாறான கருத்துக்களைக் கூற முயல்வது எவ்வளவு எதிர்மறையான தாக்கங்களை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு புனிதத் தலம் அல்லது புண்ணிய பூமி அதன் மகத்துவம் சிறிதும் குன்றாமல் பாதுகாக்கப்பட வேண்டியது எம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும். இந்துசமய ஆலயங்களோ அல்லது புனித பூமிகளோ ஆயினும் சரி அல்லது கிறீஸ்தவ, பௌத்த சமயத் தலங்கள் ஆயினும் சரி அவற்றின் புனிதம் எச்சந்தர்ப்பத்திலும் குறைவடையாது பாதுகாக்கப்படல் வேண்டும். அந்த வகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். இதனை அரசு நன்கு புரிந்துகொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என நம்புகின்றேன். ஒரு பக்கத்தால் மயிலிட்டியை நாம் விடுவிக்கப் போகின்றோம் என்று கூறிக் கொண்டு கீரிமலையில் மீன் பிடித் துறைமுகம் அமைக்க எத்தனிப்பது கரவான கண்ணியமற்ற செயலாகவே எனக்குப் படுகின்றது.
கடந்த ஆறுபது ஆண்டு காலங்களாக அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மறைந்துபோன தலைவர்களையும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஏனைய அங்கத்தவர்களையும் நினைவு கூர்வதற்கு இன்று கூட்டம் கூடியுள்ளோம். அத்துடன் மறைந்துபோன எமது எல்லா உறவுகளையும் நினைவு கூரும் முகமாகவும் இன்றைய இந்த நீத்தார் நினைவு அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதற்கு மிகப் பொருத்தமான இடமாக கீரிமலை புண்ணிய பூமியை தேர்ந்தெடுத்து இங்கு அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மடத்தில் இந்நிகழ்வுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கீரிமலைப் பிரதேசம் சித்தர்களும் ஆன்மீக வாதிகளும் சமயப் பெரியார்களும் வாழ்ந்த ஒரு பிரசித்தி பெற்ற இடம். இங்கு சிறாப்பர் மடம், வைத்திலிங்க மடம், கிரு~;ணபிள்ளை மடம், குழந்தைவேல் மடம் என கிட்டத்தட்ட பதினொரு மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இங்கே வருகை தரும் அடியவர்களுக்கும் இவ் ஆலயச் சூழலில் இருந்த சித்தர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இந்து சமய பெரியோர்களுக்கும் ஏனையோர்க்குந் தாகசாந்தி, உணவு என்பவற்றை குறைவில்லாது வழங்கி உபசரித்தது மட்டுமன்றி அந்த அடியவர்களின் அவர்களின் வழிபாடுகள் சிறப்புற நடைபெறுவதற்கும் உதவியாக இருந்தன. கீரிமலைப் பிரதேசத்தின் சிறப்புக்களையும் இங்கு வீற்றிருக்கும் நகுலேஸ்வரப் பெருமானின் அருளாட்சியையும் நன்கு அறிந்து கொண்ட முன்னைநாள் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினரும் கணிதப் பேராசிரியருமான அடங்காத்தமிழன் சி.சுந்தரலிங்கம் அவர்கள் அவரின் இறுதிக் காலத்தில் கீரிமலையை அண்டிய பிரதேசத்தில் ஒரு வீட்டை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார் என்று அறிகின்றேன்.
கடந்த முப்பது ஆண்டு கால நீண்ட கொடிய யுத்தத்தின் விளைவாக இங்கிருந்த மடங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டதுடன் ஆலயங்களின் பெரும் பகுதியும் அழிவுற்ற நிலையில் இருந்து தற்போது அவை சிறிது சிறிதாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள அனைத்து மடங்களும் அழிவுற்ற நிலையில் இந்தப் பகுதிக்கு வருகின்ற அடியவர்கள் ஒரு தேநீர் அருந்துவதற்குக் கூட ஒரு இளைப்பாறு மடமோ அல்லது தேநீர்சாலையோ இல்லாத நிலையில் மடம் ஒன்று அவசியம் என்பதை கருத்திற் கொண்டு கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும் இந்துமா மன்றமும் இணைந்து கொண்டு இவ் அழகிய மண்டத்தை அமைத்தது மட்டுமன்றி அதற்குச் “சிவபூமி” என்ற அழகிய திருநாமத்தையும் இட்டுள்ளார்கள். ஆதிகாலத்தில் சிவதொண்டர்;களைக் கூவி அழைத்து உணவு வழங்கி அதன் பின்னர் தாம் உணவு உட்கொள்ளுகின்ற வழக்கம் போல இங்கும் இந்த மண்டபத்தின் முன்வாயிலில் நின்று இவ் வழியில் போகின்ற வருகின்ற அனைவரையும் சாப்பாடு தயாராகிவிட்டது வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் என வலிந்து அழைத்து அவர்களுக்குப் போசனம் வழங்கி களைப்பாறச் செய்து அனுப்புகின்ற உங்கள் வழக்கத்தைப் பார்க்கின்ற அனைவருக்கும் மயிர்க்கூச்செறியத் தான் செய்கின்றது. தென்பகுதியில் இருந்து இங்கு வந்து செல்லும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறீஸ்தவர்களும் ஏனையவர்களும் கூட இங்கு வருகை தந்து இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டு உணவருந்தி வாழ்த்திச் செல்வதாக அறிந்து கொண்டேன். கதிர்காமத்தில் அந்தக் காலத்தில் இராமகிரு~;ண மடம் இயற்றிய அன்னதான சேவையை உங்கள் சேவை நினைவுறுத்துகின்றது.

மானிடப் பிறப்பின் முழுமையான பலனையும் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான தெய்வீகக் காரியங்கள் சிறப்புற இயற்றப்படுவது வழிவழியாக வந்த எமது முன்னோர்கள் எமக்கு கற்றுத்தந்த பாடம். அந்த வகையில் சிவபூமியின் கைங்கரியமும் அளப்பரியது. இந்த மண்டபத்தில் உணவு வழங்குவது மட்டுமன்றி ஓர் இரு நாட்கள் தங்கியிருந்து வழிபாடுகள் இயற்றுவதற்கும் ஏனைய சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் சுமார் பத்தொன்பது அறைகள் அனைத்து வசதிகளுடனும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாக அறிந்து கொண்டேன். இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் போற்றப்படவேண்டியது.
இந்துமா மன்றத்தின் செயற்பாடுகள் இலங்கையின் பல பாகங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் அதற்கென ஒரு கிளையை அமைத்தது மட்டுமன்றி கீரிமலையில் இந்த மண்டபத்தை அமைத்து இதனைப் பரிபாலனம் செய்வதற்குப் பொருத்தமான ஒரு சைவப் பெருமகனைத் தேர்ந்தெடுத்துள்ளமை பாராட்டுக்குரியது. அத்துடன் இந்த மண்டபத்தை அமைத்து இங்கே இளைப்பாறுகை, அன்னதானம் என அனைத்துப் பணிகளும் சிறப்புற நடைபெற வழி அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். அகில இலங்கை இந்து மா மன்றத்திற்கு இதன்பால் மீண்டும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த புண்ணிய தலத்தில் இன்று நடைபெறுகின்ற நீத்தார் நினைவு நிகழ்வுகளில் நினைவு கூரப்படுகின்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்தி பெற்று அமைதியுற எல்லாம் வல்ல நகுலேஸ்வரப் பெருமானை வணங்கி எனது சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com