கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது !

(பதிவு செய்த நாள் – ஐப்பசி 11, 2015, 07.52 பி.ப)  இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்காக நேற்று சனிக்கிழமை இரவு குற்றப்புலனாய்வு பிரிவினர் பேத்தாளையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்த போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
பின்னர் வழக்கறிஞர் ஊடாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் பிள்ளையான் ஆஜராகியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பி. பிரசாந்தன் கூறினார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகியோர் கைதாகி விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை

Image captionஜோசப் பரராஜசிங்கம் 2005-ம் ஆண்டு நத்தார் பிறப்பு வழிபாட்டின்போது தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு 2008- இல் முதலமைச்சராக தெரிவாகி 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் இவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவாகியிருந்த போதிலும் மாகாண அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இந்தப் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக நியமனம் பெற்றிருந்தார்.
கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான அணியினரால் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு.
பின்னர் அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து கருணா அம்மான் ஒரு சாராருடன் விலகி அப்போது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com