கிழக்கில் ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் அனுமதியுடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. முதல்நாள் மாலை நிகழ்வு கல்முனையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டத்தில் கல்விக்காக வருடாந்தம் 16 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுகின்றது. எமது எதிர்காலச் சந்ததியினருக்காகவே இத்தகைய முதலீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த சிறந்த மாகாணமாகக் கிழக்கு மாகாணம் திகழவேண்டுமென்பதே எமது இலக்காகும்.
அதேபோன்று கல்வித்துறையில் சிறப்பான கவனம் செலுத்தி ஏனைய மாகாணங்களைப் போன்று முன்னணி இடத்தைக் கிழக்கு மாகாணமும் பெற்று முன்னேறுவதற்காக முயற்சிகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.
கிழக்கில் ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நினமனம் வழங்குவதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com