சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / கிளிநொச்சி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை

கிளிநொச்சி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பின்னரே கிளிநொச்சி வளாகம் திறக்கப்படும் என்று வளாகத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு எவரும் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்று பிரதிப் பதிவாளர், பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இராணுவச் சிப்பாயாகக் கடமையாற்றினார். அவருக்கு கோரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது.

சகோதரனுக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது சகோதரி கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை கம்பஹாவில் இருந்து மதவாச்சி வரை தொடருந்தில் வந்திறங்கி, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சிக்கு வந்திறங்கியுள்ளார்.

அவர் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த போதும் கூட்டு கற்கை (Groun Study) சிற்றுண்டிச் சாலையில் உணவருந்தல் மற்றும் பரீட்சை மண்டபத்தில் ஏனைய மாணவர்களுடன் பழகியிருப்பார் என்ற சந்தேகம் சுகாதாரத் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

மாணவியின் உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அதன் பெறுபேறுகள் மாலை வெளியிடப்பட்டது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com