கிரிக்கெட்டின் ரவுடி கவுதம் கம்பிர் !

ழக்கமாக கால்பந்து போட்டிகளில்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அது ‘பாடி காண்டக்ட் கேம்’. வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு விளையாடுதால் தள்ளு முள்ளு ஏற்படுவது கால்பந்து போட்டிகளில் வாடிக்கையானதுதான். 
இதனால் கால்பந்து போட்டிகளில் மோதல் நடந்தால் சகஜமாக எடுத்து கொள்ளவார்கள். ஆனால் இப்போது கால்பந்து போன்றே கிரிக்கெட்டும் மாறி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கவுதம் காம்பீர் அனேக வீரர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

சர்வதேச அளவில் பல முன்னணி வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ள, கம்பிர் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மோதலை தடுக்க வந்த, நடுவர் ஸ்ரீநாத்தையும் தள்ளி விட்டார். 

அதோடு ‘போட்டி முடிந்ததும் மாலையில் உன்னை அடிக்கிறேன்’ என்று கவுதம் கம்பிர் கத்த, அதற்கு ‘இப்போதே ஒரு கை பார்த்து விடலாம்’ என்று மனோஜ் திவாரி ஆவேசமடைய நேற்று டெல்லி மைதானத்தில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இதனை பார்த்து பதற்றமடைந்த நடுவர் ஸ்ரீநாத் குறுக்கே வர, அவரை கீழே தள்ளினார் கம்பிர்.
ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து போட்டி நடுவர் வால்மிக் பக், கவுதம் கம்பிருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 70 சதவீதத்தையும் மனோஜ் திவாரிக்கு 40 சதவீதத்தையும் அபராதமாக விதித்தார். ஆனால் நடுவரை தள்ளி விட்டதற்காக மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுதம் கம்பிர் போட்டி கட்டணத்தில் 70 சதவீத அபராதத்துடன் தப்பித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மனோஜ் திவாரி ஐ.பி.எல். சீசனில் 2008மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடினார். தொடர்ந்து 2010 முதல் 3 ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பிருடன் கருத்து வேறுபாடு இருந்திருக்கும் போலத் தெரிகிறது. அந்த பகைமைதான் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளைவுதான் களத்தில் இதுபோன்ற பகை உணர்வை ஏற்படுத்துவதான  இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிஷன் சிங் பேடியும் கருத்து தெரிவித்துள்ளார்.
கம்பிர் எதிரணி வீரர்களிடம் இது போன்று பல முறை மோதலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்ரிடியுடன் கம்பிர் மோதலில் ஈடுபட்டார். பின்னர் ரன்னுக்கு ஓடும் போது, அப்ரிடியை முழங்கையால் இடித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். 

கடந்த 2008ஆம் ஆண்டு  இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி டெல்லியில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியின் போது, வாட்சனுடன் தகராறு செய்த கம்பிர், அவரை முழங்கையால் குத்தினார். கவுதம் கம்பிருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. 

கடந்த 2013ஆம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலியை பார்த்து கம்பிர் ஏதோ சொல்ல, அவரும் இவரை நோக்கி வர மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சகவீரர்கள் இருவரையும் பிரித்து விட்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com