கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி -வடகொரியா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன.
வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற “பயங்கரவாதக் குழு”, உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளைக் கண்டறிந்து, “இரக்கமின்றி அழிக்கப்” போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சையும் புதிதாக கிளம்பியிருக்கிறது.
வட கொரியப் பிரச்சனைக்குத் `தீர்வு` காணவும் அது அணுஆயுதங்களை மேம்படுத்துவதை நிறுத்தவும், முயலப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி கூறியுள்ளார்.
‘நுண் துகள் நச்சு பொருள்’
“சி.ஐ.ஏ மற்றும் தென்கொரிய புலனாய்வு சேவைகள், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசுக் கட்சியின் உயர் தலைமை மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருப்பதாக” வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிம் ஜோங்-உன் பெயரை வெளிப்படையாக அது கூறவில்லை. ஆனால் அவர் பரவலாக கட்சியின் உயர் தலைவர் என்று குறிப்பிடப்படுகிறார்.
இந்த சதியில் “கதிரியக்க பொருள் மற்றும் நுண் நச்சு பொருள் உட்பட உயிர்வேதியியல் பொருட்கள்” பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் “ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு பிறகே தெரியும்”, என்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
“கிம்” என்ற பெயரை கொண்ட ஒரு வடகொரியர் ரஷ்யாவில் பணிபுரிந்தபோது, தென்கொரிய புலனாய்வுச் சேவையால், ” கெடுக்கப்பட்டு லஞ்சம் தரப்பட்டதாக“ வடகொரிய அமைச்சகம் குற்றம்சாட்டுகிறது.
அவருக்கு சுமார் மூன்று லட்சம் டாலர்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல்வேறு பண பரிமாற்றங்களை பட்டியலிடும் இந்த செய்திக்குறிப்பு, அவர் பியாங்யாங்குக்கு திரும்பிய பின்னர், அடிக்கடி பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு இடம் மற்றும் அங்கு தாக்குதல் நடத்த சாத்தியமான வழிமுறைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
“உளவுத்துறை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் சதித்திட்டமிடும் அமைப்புக்கள் மற்றும் அவர்களின் கைப்பாவைக் குழுவினருக்கு எதிராக, கொரிய பாணியிலான பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஆறாவது அணுஆயுதத்தை வடகொரியா பரிசோதிக்கப்போவதாக நிலவும் அச்சங்களைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளுக்கும், வடகொரியாவிற்கும் இடையே அண்மை வாரங்களில் சொற்போர் முற்றிவிட்டது.
சனிக்கிழமையன்று வடகொரியா பரிசோதித்த பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தோல்வியில் முடிவடைந்தது.
இது இரண்டு வாரங்களுக்குள் நிகழ்ந்த இரண்டவது பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனைத் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, கொரியா தீபகற்பத்திற்கு தனது போர்க்கப்பலை அனுப்பியிருப்பதுடன், தென்கொரியாவில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு அமைப்பையும் நிறுவியிருக்கிறது.
“வட கொரிய தலைமையை அமெரிக்கா அகற்ற வேண்டும்” என்று குடியரசுக் கட்சியின் கவர்னர் ஜான் காசிச்சி, பிபிசியிடம் ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com