காவல்துறை முறையான விசாரணைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கில்லை – சிவில் சமூக அமையம்

Tamil-Civil-Society-Forumயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை. 

20.10.2016 அன்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்ட பவன்ராஜ் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டிக்கிறது. மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போருக்கு பின்னரான சூழலில் நீதியும் கௌரவத்துடனான சமாதானமும் இல்லை. சமாதானமுமற்ற யுத்தமுமற்ற சூழலில் நுண் வழிகளில் அடக்குமுறை சூழல் தொடர்கிறது. இத்தகைய சூழலில் இடம் பெற்றுள்ள இந்த கொலைகள் இந்த அடக்குமுறைச் சூழலை மேலும் ஆழப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. இப்படுகொலைகள் முறையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இல்லாவிடில் இத்தகைய கொலைகள் மிகப் பெரிய சமூக அச்சத்தை உருவாக்க வல்லன.

ஆரம்பத்தில் படுகொலையை மூடி மறைத்து விபத்தாக காவல்துறை காட்ட முயற்சித்தமை விசாரிக்கப்படவேண்டியது. முறையான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கையை இது பாதிப்பதாக உள்ளது. இலங்கையின் காவல்துறை முறையான விசாரணைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ஓர் சமூகமாக, நாம் விழிப்பாக இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும். அமைதியான, ஒழுங்கமைக்கப்பட்ட போராட்ட உத்திகள் மூலமாகவே நாம் நீதியான விசாரணைகளை ஓரளவுக்கேனும் உறுதிபடுத்திக்ககொள்ளலாம். இக்கொலைகள் எம்மை கூட்டு அச்சத்திற்குள் மூழ்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. ஆழமான சமூக உரையாடல்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைதி வழி சமூக செயற்பாட்டுக்குமான காலமிது.

எழில் ராஜன், குமாரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com