கால அவகாசம் வழங்க தமிழ் மக்கள் இணங்கவில்லை! நாங்கள் வழங்கினோம்! – சம்பந்தன்

இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை எனவும், ஐநாவுக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கால அவகாசத்தை வழங்கியது என ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெட்மனை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று (21) ஐநா அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தியிருந்தனர்.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, அரசியலமைப்பு மாற்றம், நல்லிணக்கம், ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் கடைப்பிடிக்கப்படும் மெத்தனப்போக்கு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையில் நிலவும் போட்டி காரணமாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலை மீண்டும் ஏற்பட அனுமதிக்கமுடியாது.

இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்க தமிழ்மக்கள் விரும்பவில்லை. ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இரண்டு வருட கால அவகாசத்துக்கு இணக்கம் தெரிவித்தது.

தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் போதுமானளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இலங்கை படையினர் வசமுள்ள காணிகள், காணாமல்போனோர் விடயங்கள், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com