கால அவகாசம் அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துச்செல்லவே வழிவகுக்கும் – கஜேந்திரகுமார்

ஐநா மனித உரிமை பேரவையின் 34 வது அமர்வில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை மீதான கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கருத்துகள்:-
தமிழ் மொழிபெயர்ப்பு கீழ்வருமாறு
கஜேந்திரகுமார் உரை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இங்கு இதனை நான் சமர்ப்பிக்கிறேன்
சிறிலங்காவின் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பவற்றின் கட்டமைப்புசார் சிதைவு மற்றும் ஊழல் போன்றவற்றால் தகமை இழந்து போயிருக்கும் சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்புகள் , குற்றவியல் விசாரணையையும் , அதனைத்தொடர்ந்த குற்றவியல் வழக்குதொடுத்தலையும் கொண்டுநடத்தக்கூடிய உள்ளகப்பொறிமுறையொன்றிற்கு பொருத்தமற்றது என்பதே , 2015 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமை பேரவையின் அலுவலக விசாரணை அறிக்கையின் முக்கிய வெளிப்படுத்தலாக இருந்தது.
இந்த பின்னணியிலேயே , மனித உரிமை பேரவை ஆணையாளர் அவர்கள் , உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையொன்றை நிராகரித்து , ஒரு கலப்பு நீதிமன்றை கோரி நின்றார்.
ஐநா மனித உரிமைப்பேரவை ஆணையாளர் அவர்களினால் இந்தத்தடவை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூட , கலப்பு நீதிமன்றம் குறித்தான தனது சிரத்தையை விசேடமாக அழுத்தித்தெரிவித்திருந்த போதிலும் , சிறிலங்காவின் அதிகாரப்படிநிலையின் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியும் பிரதமரும் பல முக்கிய அமைச்சர்களும் ,மீண்டும் மீண்டும் இந்த கலப்பு நீதிமன்றை நிராகரித்திருக்கிறார்கள். 2015 அக்டோபர் ஐநா மனித உரிமைபேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே அவர்கள் மிகத்தெளிவாக இதை நிராகரிப்பதை தெரிவித்து வந்துள்ளார்கள்.
இவற்றைவிட , சிறிலங்காவின் எந்த ஒரு படைவீரனும் எந்த ஒரு நீதிப்பொறிமுறையின் கீழும் தண்டிக்கப்படாமல் இருப்பதை நான் உறுதிப்படுத்துவேன் என சிறிலங்கா ஜனாதிபதியே தெரிவித்திருப்பதுதான் இங்கு எச்சரிக்கையுடன் குறித்துக்கொள்ளவேண்டிய மிகவும் முக்கியமான விடயமாகும்.
நடைமுறை யதார்த்தத்தம் இப்படியாக இருக்கையில் ,ஐநா மனித உரிமை பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்தில் , ஏற்கனவே மிகத்தெளிவாக அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட, கலப்பு நீதிமன்றம் குறித்த பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கென மேலும் இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதென்பது உண்மையில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துச்செல்லவே வழிவகுக்கக்கூடும் என்பதை ஆணையாளர் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?
இரண்டாவதாக, ரோம் சாசனத்தினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுமாறு ஆணையாளர் அவர்கள் , சிறிலங்காவை வேண்டியிருக்கும் நிலையில்சர்வதேச நீதிமன்றுக்கு சிறிலஙகாவை பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நீதிக்கான வழியென்பதை ஆணையாளர் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com