சற்று முன்
Home / செய்திகள் / காபன் பரிசோதனையை வைத்து புதைகுழி காலத்தை தீர்மானிக்க முடியாது

காபன் பரிசோதனையை வைத்து புதைகுழி காலத்தை தீர்மானிக்க முடியாது

“மன்னார் மனித புதைக்குழி தொடர்பான காபன் ஆய்வறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, கால எல்லையை நிர்ணயிக்க முடியாது” என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவித்தார்.

அறிக்கையில் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விஞ்ஞான ரீதியிலான விடயங்களை ஆராய வேண்டும். அவற்றை ஆராய்வதற்காக, மன்னாரில் நாளை காலை மருத்துவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் ஒன்று கூடி ஆராயவுள்ளோம்” என்றும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1499 – 1719ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான அறிக்கையொன்று ஏற்கனவே கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அறிக்கை தொடர்பிலான சுருக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை, அகழ்வுகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச விடுத்திருந்தார்.

மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திடம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தது.

சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று, இந்த மாதிரிகளை கையளித்திருந்தது.

இந்த குழுவில் காணாமற்போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், காணாமற்போனோரின் உறவினர் உள்ளிட்டவர்களும் இந்த குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இவ்வாறு கையளிக்கப்பட்ட மாதிரிகளின் சுருக்கம் அடங்கிய அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வெளியாகியுள்ள பின்னணியிலேயே, அதன் கால எல்லை இன்று வெளியிடப்பட்டது.

மன்னார் – சதொச கட்டட வளாகத்தில் மனிதப் புதைக்குழியிலிருந்து இன்று வரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என்று சட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வுகள் இன்று 155ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவித்தார்.

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், மண் மாதிரி, அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்கள் உள்ளிட்டவை மேலும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தியே, இந்த கால எல்லையை சரியாக நிர்ணயிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அறிக்கையில் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த விஞ்ஞான ரீதியிலான விடயங்களை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை ஆராய்வதற்காக, மன்னாரில் நாளை காலை வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் ஒன்று கூடி ஆராயவுள்ளதாகவும் காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் சுட்டிக்காட்டினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com