காணி,பொலிஸ் அதிகாரம் உட்பட இரு வாரங்களில் இடைக்கால அறிக்கை!

காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான இடைக்கால அறிக்கை இரு வாரங்களில்  புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டு   இரண்டு வாரங்களுக்குள் முற்றுப்பெறுமென விடயமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான அதிகாரப் பகர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையே இறுதி வடிவம் பெறும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில், புதிய அரசமைப்புத் தொடர்பாக ஆராயும் வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன.

இந்தக் கலந்துரையாடல்களில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை, நாளை செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெறச்செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளதாக அறிய முடிகிறது.

இருந்தபோதிலும், புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் இறுதிவடிவை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உப குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பிரதான ஆறு விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆறு பரிந்துரைகளில் முதலாவதாக நாட்டினுடைய சுபாவம் கருத்திற்கொள்ளப்படவுள்ளது. அதாவது ஒற்றையாட்சியா, சமஷ்டியா அல்லது இரண்டுக்கும் பொதுவான விடயதானமா என்பது தொடர்பில் அறிவுறுத்தப்படவுள்ளது.

இரண்டாவதாக சமயத்தைப் பற்றிக் கூறப்படவுள்ளது. பௌத்தத்துக்கு முன்னுரிமை மற்றும் ஏனைய மதங்களுக்கான அந்தஸ்து தொடர்பாகப் பரிந்துரைக்கப்படவுள்ளது.

மூன்றாவதாக அதிகாரப் பகிர்வு பற்றிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாகாணசபை முறைமை மற்றும் செனட் சபை போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், ஒருசிலர் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு – கிழக்கு இணைப்பைக் கோரிநிற்கிறது. ஆகவே, இந்த விவகாரமும் இழுபறி நிலையிலேயே தொடர்கிறது.

நான்காவதாக, தேர்தல் முறைமை பற்றிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை பற்றிய பரிந்துரையே வலுப்பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.

தொகுதிவாரித் தேர்தல் முறையில் 60 சதவீதமும் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் 40 சதவீதமும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தொகுதிவாரித் தேர்தலில் 140 உறுப்பினர்களும் விகிதாசார முறைமையில் 93 உறுப்பினர்களுமாக 233 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஐந்தாவதாக நிறைவேற்று அதிகார முறைமை பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க அனுமதிக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

இதில் முதல் ஐந்து பரிந்துரைகளில் பிரச்சினைகள் இல்லாத போதிலும், ஆறாவது விடயமான சட்டம், ஒழுங்கு, காணி, பொலிஸ் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இன்னமும் இழுபறி நிலைமை இருப்பதாக அறியக் கிடைக்கிறது.

இதேவேளை, பிரதமருக்கான அதிகாரம் தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மினிஸ்டர் முறைமை அல்லது மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதர் அல்லது தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரேரிக்கின்ற பிரதமர் வேட்பாளர் என்ற முறைமை தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com