காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ் பெறும் காலஎல்லை நீடிப்பு!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது, காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து, மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான சட்டம் ஏற்கனவே இரு தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது தடவையாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன வெளியிட்டிருக்கின்றார்.

2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் ஏதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி முதல் 2019 டிசம்பர் 09ம் திகதி வரை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கருதப்படும் நபரின் மரணத்தை பதிவு செய்து மரண சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையிலான அந்த சட்டம் 2010ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்கள் என காலஎல்லை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவை கருதி இரு வருடங்களுக்கொரு தடவை நீடிக்க முடியும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் காணாமல் போனதாக கூறப்படும் நபர் இறந்திருக்கலாம் என கருதப்படும் சந்தர்ப்பத்தில் மரணத்தை பதிவு செய்து உறவினர்கள் மரண சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட ஓழுங்கு விதிகளின் கீழ் ஒருவர் காணாமல் போன ஒரு வருடத்தின் பின்னர் மரணத்தை பதிவு செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் அரசியல் பின் புலத்தில் காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்களின், உறவினர்களினாலும் மனித உரிமைகள் அமைப்புகளினாலும் ஏற்கனவே இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.  சர்வதேச சமூகத்தினாலும் இதே கருத்து முன் வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான செயலலகமொன்றை நிறுவ இலங்கை அரசு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய கோரி காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்களின் போராட்டங்களும் தொடர்கின்றன, என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com