காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? – நிலாந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்தது. நீரிழப்பினால் அவர்களுடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதை ஒரளவுக்கு மழை தடுத்தது. அந்தப் போராட்டத்திற்கு படிப்படியாக வெகுசன ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. உண்ணாவிரதிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால் அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்றிருந்த ஒரு கட்டத்தில் அரசாங்கம் தலையிட்டது. வரும் 9ம் திகதி பாதுகாப்பு அமைச்சரும் பிரதமரும் சட்டமாஅதிபர் திணைக்களமும் பாதிக்கப்பட்ட மக்களும் இது தொடர்பில் சந்தித்துப் பேச இருக்கிறார்கள் கடந்த 7ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.

தமிழ் மக்கள் மத்தியில் காணாமல் போனவர்கள் மூன்று வகைப்படுவர். முதலாவது கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள். இதில் கைது செய்தது யார் என்பது தெரியும். இரண்டாவது வகை யார் பிடித்தது என்றே தெரியாமல் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இதில் யார் பிடித்தது என்பது தெரியாது. மூன்றாவது வகை சரணடைந்த பின் அல்லது கையளிக்கப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இதில் யாரிடம் கையளித்தது என்பது அநேகமாகத் தெரியும்.

இந்த மூன்று வகையினரிலும் குறிப்பாக அரசபடைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி கேட்டே வவுனியாவில் உறவினர்கள் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் நான்கு தெளிவான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். முதலாவது காணாமல் போனவர்கள் உயிரோடுள்ளார்களா? இரண்டாவது அவர்கள் எங்கே? எந்த சித்திரவதை முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? மூன்றாவது அவர்கள் உயிருடன் இல்லையென்றால் யார் அவர்களைக் கொன்றது? எந்த நீதிமன்றம் அவர்களைக் கொல்லுமாறு கட்டளை இட்டது? நான்காவது அனைத்தது அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இப்பொழுதும் எங்கோ ரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவே ஒரு பகுதி உறவினர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை சோதிடர்களும் பலப்படுத்துகிறார்கள். இது தொடர்பில் தமிழர் தாயகத்தில் உள்ள காணாமல் போனவர்களுக்கான அமைப்புக்களோடு உரையாடும் போது மாவட்ட ரீதியிலான ஒரு துலக்கமான வேறுபாட்டை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வடக்கச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தமது உறவுகள் இப்பொழுதும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் கிழக்கில் கணிசமானவர்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக கடைசிக்கட்டப் போரைக் கடந்து வந்தவர்கள் தமது உறவினர்கள் இப்பொழுதும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறார்கள். குறிப்பாக படையினரிடம் கையளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தவரின் உறவினர்கள் தமது பிள்ளைகள் வௌ;வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். அவர்களை தமக்குத் தெரிந்தவர்கள் கண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறார்கள். வேறு சிலர் அவர்களுடைய பிள்ளைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாரோ ஒருவர் தமக்குத் தகவல் வழங்கியதாக தெரிவிக்கின்றார்கள். சில சமயங்களில் இவ்வாறு தகவல்களை வழங்கியவர்கள் பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பணமும் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு பணம் பெற்றவர்களில் சிலரை உறவினர்கள் அடையாளம் காட்டக் கூடியதாகவும் இருக்கிறது.Dissapear_students_with_maithreee1

இவ்வாறு தமது பிள்ளைகள் இப்பொழுதும் எங்கேயோ உயிருடன் இருப்பதாக நம்பும் உறவினர்களில் பல வகையினர் உண்டு. உதாரணமாக கடைசிக்கட்டப் போரில் காணாமல் போன இரண்டு சிறுமிகளைத் தேடும் இரண்டு தாய்மார்களைக் குறிப்பிடலாம். அந்த இரண்டு சிறுமிகளையும் சில ஆண்டுகளின் பின் விநியோகிக்கப்பட்ட ஒரு தேர்தல் பிரச்சாரத் துண்டுப் பிரசுரத்தில் உள்ள ஓர் ஒளிப்படத்தில் தாம் கண்டதாக அந்தத் தாய்மார் கூறுகிறார்கள். அது கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் ஆகும். அதில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் துண்டுப் பிரசுரம் ஒன்றிலேயே அந்தப் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவர் முன்பு மகிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஒளிப்படம் அதுவென்று கூறப்படுகின்றது. அந்த ஒளிப்படத்தில் இரண்டு மாணவிகள் பக்கவாட்டாக முகத்தைக் காட்டியபடி மைத்திரிக்கு அருகே நிற்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்களுடைய பிள்ளைகளே என்று தாய்மார் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தும் இருக்கிறார்கள். அதுபற்றி தான் விசாரிப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அவ்வாறு வாக்களித்து பல மாதங்கள் ஆகி விட்டன. அதன்பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா செயற்குழுவைச் சேர்ந்த சிலரையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். அவர்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரியிடம் சேர்ப்பித்து விட்டதாக ஐ.நா அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இன்றுவரையிலும் பதில் இல்லை.

மேற்படி மாணவிகள் தொடர்பில் சில செயற்பாட்டாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.அந்த இரண்டு மாணவிகளும் குறிப்பிட்ட தாய்மார்களுடைய பிள்ளைகளை ஒத்த தோற்றத்தில் இருப்பதாகவும் ஆனால் அவர்கள் மெய்யாகவே அவர்களுடைய பிள்ளைகள் அல்லவென்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். காணாமல் போன தமது பிள்ளைகளையே சதா நினைத்துக் கொண்டு இருப்பதனால் அவர்களுக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம் என்றும் இது ஒரு வகைப் பிரமையா என்றும் அவர்கள். சந்தேகிக்கிறார்கள்;.

பிள்ளைகள் காணாமல் போனதை அடுத்து மனாதாலும், உடலாலும் வருந்தி வருந்தி ஒரு பகுதி பெற்றோர் சித்தப் பிரமை பிடித்தவர்கள் போலாகி விட்டார்கள். செட்டிக்குளத்தில் ஒரு சந்திப்பின் போது ஒரு தாய் சொன்னார். “எனது பிள்ளையை யாழ்ப்பாணத்தில் கண்டி வீதியில் கண்டேன். அப்பொழுது நான் வவுனியாவிற்கு வரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அது ஒரு செக்கல் நேரம். எனது மகன் வேறு யாரோ சிலருடன் நின்று கதைத்துக் கொண்டிருந்தான”; என்று. பல காலாமாகத் தேடி வரும் மகனை கண்டவுடன் பேரூந்தை நிறுத்தி இறங்கி ஓடிப் போயிருந்திருக்க வேண்டும். நீங்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? என்று கேட்ட போது அந்தத் தாயிடம் பொருத்தமான பதில் இருக்கவில்லை.

அவரைப் போலப் பலர் இவ்வாறு குழம்பிக் குழம்பிக் கதைக்கக் காணலாம். பிள்ளைகள் இப்பொழுதும் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை யதார்த்தமாக மாற்றிக்காணும் பிரமைகளா இவையெல்லாம்?

குறிப்பாக மேலே சொன்ன இரண்டு மாணவிகளின் விடயத்திலும் அது பிரமையா? இல்லையா என்பதை மிக இலகுவாகக் கண்டு பிடிக்கலாம். அவர்கள் குறிப்பிடும் ஒளிப்படம் ஓர் உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தில் காணப்படுகிறது. நாட்டின் அரசுத் தலைவருக்கான ஒரு தேர்தல் பிரச்சாரம் அது. அவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் தெருவில் கிடந்து எடுத்த ஒரு ஒளிப்படத்தை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதற்கென்று உத்தியோகபூர்வமான ஒரு புகைப்படக் கலைஞர் இருப்பார். தற்போடு பயன்படுத்தப்படும் நவீன கமராக்களில் ஒளிப்படமானது எடுக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தோடு கிடைக்கிறது. எனவே அந்த ஒளிப்படத்தை எடுத்தது யார்? எங்கே எடுத்தார்? அது எந்தப் பாடசாலை? போன்ற விடயங்களை சில மணி நேரத்தில் கண்டு பிடித்து விடலாம். அது ஒரு பெரிய வேலையே அல்ல. ஆனால் அவ்வாறான வழிமுறைகளுக்கூடாக உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு ஏன் முடியாமல் இருக்கிறது?SRI_LANKA_-_0922_-_Madri_tamil

மேற்கண்ட உதாரணங்கள் யாவும் வடபகுதிக்குரியவை. ஆனால் கிழக்கில் நிலமை வேறாக இருக்கிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உறவினர்கள் காணாமல் போனவர்கள் இனி வரமாட்டார்கள் என்று நம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கடைசிக்கட்டப் போருக்கு முன்னைய கட்டங்களில் காணாமல் போனவர்கள். அவர்களை யார் பிடித்தது? யார் காட்டிக் கொடுத்தது? விடுவிப்பதற்கு யார் கப்பம் கேட்டது? போன்ற விபரங்களையெல்லாம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் கூறுகின்றார்கள். “அரிசி விற்ற காசெல்லாம் போட்டோக் கொப்பி எடுத்தே கரைந்து போய்விட்டது” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பாண்டியிருப்பு என்ற ஒரு கிராமத்தின் பெயர் திரௌபதி அம்மனோடு சேர்ந்தே ஞாபகத்திற்கு வரும். அந்தக் கிராமத்தில் ஒரு திரௌபதி அம்மன் ஆலயம் உண்டு. ஆனால் அந்தக் கிராமத்தில் விதவைகள் சங்கம் என்ற ஒன்றும் இருப்பது என்பது தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்? காணாமல் போனவர்களின் மனைவிமார்கள் உருவாக்கிய ஒரு சங்கம் அது. அதிரடிப் படையின் கெடுபிடிகள் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கம் என்று அதற்கு பெயர் வைக்க முடியவில்லை. பதிலாக விதவையர் சங்கம் என்றே பெயர் வைக்கப்பட்டது. இப்பொழுது முதியவர்களாகி விட்ட அந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்கள் திரும்பிவர மாட்டார்கள் என்றே நம்புகிறார்கள்.

அவர்களைப் போன்ற கிழக்கைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்த பொழுது ஒரு செயற்பாட்டாளர் கேட்டார். நீங்கள் இப்பொழுது எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று? அவர்கள் மிகவும் சன்னமான குரலில் தெளிவாக அறுத்துறுத்து சொன்னார்கள். “எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுடைய உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது முதலாவது. இரண்டாவது எங்களுக்கு நஸ்டஈடு வேண்டும்” என்று.

ஆனால் இதுதொடர்பில் சட்டநடவடிக்கைகளை எடுப்பதென்றால் சம்பந்தப்பட்ட அமைப்புக்களிற்கு வழக்கறிஞ்ஞர்களின் உதவி தேவை இவ்வாறு வழக்கறிஞர்களின் உதவியை கடந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில்தான் சில அமைப்புக்கள் பெற்றிருக்கின்றன. மேற்படி அமைப்புக்களுக்கிடையே ஒருங்கிணைப்பும் போதியளவு இல்லை சில அமைப்புக்களின் தலைமைத்துவமும் நிர்வாகக்குழுவும் பலவீனமாகக் காணப்படுகின்றன. ஊதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள அமைப்பில் கிட்டத்தட்ட 600 பேர்வரை உண்டு. ஆனால் அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பது எல்லா உறுப்பினர்களுக்கும் தெரிந்திருப்பதில்லை. வவுனியாவில் ஒரு சந்திப்பின் போது யாழ்ப்பாணத்து அமைப்பைச் சேர்ந்த ஒரு முதிய பெண் சொன்னார் “ஒரு வழக்கறிஞரை அமைப்பின் ஆலோசகராக வைத்திருக்கு வேண்டிய அவசியம் தெரிகிறது. ஆனால் எமது அமைப்பின் தலைவர் நோய் வாய்ப்பாட்டு மருத்துவமனையில் இருக்கிறார்” என்று. அப்பொழுது குறுக்கிடடு; மற்றொருவர் சொன்னார் இல்லை அவர் இறந்து பல நாட்களாகிவிட்டன” என்று.

இதுதான் நிலைமை. காணாமல் போனவர்களுக்கான அமைப்புக்கள் போதிய பலத்தோடில்லை. சில செயற்பாட்டாளர்களையும் மதகுருக்களையும் தவிர பெரும்பாலான அரசியல்வாதிகள் இவர்களை ரெடிமேற் போராட்டக்காரர்களாகவே பாவித்து வந்துள்ளார்கள். வடமாகாணசபையைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் தொடக்கத்தில் இந்த அமைப்புக்களோடு நெருங்கி செயற்பட்டுள்ளார். ஆனால் இப்பொழுது மேற்படி அமைப்புக்கள் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லை. கடந்த ஆண்டு முல்லைத்தீவில் கள்ளப்பாடு கிராமத்தில் நடந்த ஒரு சந்திப்பில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்படி மாகாணசபை உறுப்பினரைக் கடுமையாக விமர்சித்தார்கள். 2

கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி விரக்தியுற்ற ஒரு நிலையிலேயே வவுனியாவில் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்குபற்றிய ஒரு தந்தை அங்கு வருகை தந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார். “நாங்கள் போராடிச் சாகிறோம் நீங்கள் எங்களுடைய குடும்பத்தைத் தத்தெடுப்பீர்களா? ” என்று. அவர்களுடைய குடும்பங்களைத் தத்தெடுப்பதற்கு மட்டுமல்ல அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் தயாரில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியையும் நஸ்ட ஈட்டையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்திற்குள்ள தலையாய பொறுப்புக்களில் ஒன்று என்று 2015ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் (30/1)கூறுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அத்தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையோடு நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசாங்கம் ஏறக்குறைய இருபத்தைந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அப்பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக என்னென்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதனை வரும் மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எடுத்துக்காட்டவேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கமும் உட்பட ஆயுதம் ஏந்திய எல்லாத் தரப்புக்களும்தான். 30/1 ஜெனீவாத் தீர்மானத்தின்படி அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பின்வரும் முக்கிய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

1. காணாமல் போன்றவர்களுக்கான அலுவலகத்தைத் திறப்பது.2.சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில் நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல்;. 3. உண்மை வெளிப்படையாக பேசப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்கி அதற்கு வேண்டிய ஆணைக்குழுவை உருவாக்குவது. 4. நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது. 5.இழப்பீட்டிற்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பது. 6.பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதோடு சாட்சிகள், பாதிக்கப்பட்டோர்,புலன்விசாரணையாளர்கள், வழக்கறி;ஞர்கள்;, நீதிபதிகளைப் பாதுகாத்தல். 7.பாரதூரமான மனித உரிமை மீறல்களை வழக்கு விசாரணை செய்தலும்,தண்டனை வழங்குவதற்கேற்ப உள்நாட்டுச்சட்டங்களை சீர்திருத்துவதும்.8.பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்விற்குட்படுத்தி பலப்படுத்துவது. 9. மோதல் காலங்களில் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்புக் கூறும் செயல்முறையை செயல்படுத்தல.; 10.பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுதலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிடல் மற்றும் உறுதிப்படுத்தல். 11பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டிருத்தலை சட்டவறையறைக்குட்பட்ட குற்றவியல் குற்றச் செயல்களாக கணித்தல். 12.காணமல் போனோர் இல்லை என்பதை உறுதி செய்யுமுகமாக அவர்களது குடும்பங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கல் (Certificates of Absence)

மேற்கண்ட பன்னிரண்டு பொறுப்புக்களும் இலங்கைத் தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமானவை.அதாவது நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமானவை. ஆனால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிர்ச்சியூட்டும் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார். காணாமல் போனவர்கள் எவரும் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதே அதுவாகும். சில தினங்களுக்கு முன் அவர் கூறியுள்ளார் “காணாமல் ஆக்கப்பட்ட எவரும் சட்டரீதியாக இலங்கைத்தீவை விட்டு வெளியே செல்லவில்லை” என்று. போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதமர் ரணிலை சந்தித்திருக்கிறார். காணாமல் போனவர்கள் உயிருடனில்லை என்றால் அவர்களைக் கொன்றது யார்? முன்னைய அரசாங்கமா? என்ற தொனிப்பட அவர் கேட்டிருக்கிறார். அதற்கு ரணில் தலையை ஒருவிதமாக அசைத்து ஒரு சிரிப்பு சிரித்திருக்கிறார். “உங்களுக்குத் தெரியும்தானே எது உண்மையென்று” என்று சொல்வது போல இருந்ததாம் ரணிலுடைய சிரிப்பு. அரசாங்கம் இது தொடர்பான உண்மைகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு தயாரில்லை.

காணாமல் போனவர்களை யார் கொன்றது? அல்லது கொல்லுமாறு உத்தரவிட்டது? என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தால் அது இப்பொழுது தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரை குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் நிறுத்தி விடும். அப்படி ஒரு நிலமை வந்தால் மகிந்த சும்மா இருப்பாரா? அது ரணில் மைத்திரி அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்து விடும். அப்படி ஒரு நிலை வருவதை மேற்கு நாடுகள் விரும்புமா? தமது தத்துப் பிள்ளையான ஓர் அரசாங்கம் பலவீனமடைவதை அவர்கள் விரும்புவார்களா? ஆயின் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லையா? நிலைமாறுகால நீதி எனப்படுவது ஒரு கவர்ச்சியான பொய்யா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com