காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்ததாக 4 தினங்களின் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

 

யாழ்ப்பாணத்துக்கு கடந்த திங்கட்கிழமை வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோர் உறவினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று அறிக்கையும் படமும் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்
பிரிவு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும் ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும் காணாமற்போனோர் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவில்லை என திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பொய்ச் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (22) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கல்லூரி வளாகத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சந்தித்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னறிவித்தலின்றி சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வளாகத்துக்குள் வருகை தந்திருந்த, அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை, சந்தித்ததோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கமைய காணாமற்போனோர் அலுவலகத்தினூடாக நியாயமான தீர்வுகள் அவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமற்போனோரின் உறவினர்களால் ஏற்கனவே வேண்டுகோள் எதுவும் விடுக்கப்பட்டிராத நிலையிலேயே இந்த சந்திப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

ஆயினும் ஜனாதிபதி, காணாமற்போனோரின் உறவினரை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும், ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும் இந்தச் செய்தி திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் – என்றுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவனும் பாடசாலையின் முன்னைய அதிபர் வண.பிரான்சிஸ் யோசப் தொடர்பான பொறுப்புக்கூறலை வேண்டி ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆரோக்கியநாதர் தீபன்திலீசனை வாகீசம் தொடர்புகொண்டு கேட்டபோது,

நாங்கள் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தோம். நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு எவரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை. பொலிஸ் அதிகாரி ஒருவேரை எம்மை அழைத்து
எம்மில் மூன்றுபேரை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாகவும் சாந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி எம்மை கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.

எனினும் நிகழ்வு முடியும்வரை ஜனாதிபதியை நாம் சந்தித்திருக்கவில்லை. நிகழ்வு முடிந்தபின்னர் எம்மை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என்று நாம் நம்பியிருந்தோம். ஆயினும் ஜனாதிபதி செல்லும்பொது எனது கையில் வைத்திருந்த எமது பாடசாலையின் முன்னாள் அதிபரது படத்தினை மட்டுமே ஜனாதிபதியிடம் கையளிக்கமுடிந்தது. உரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. உரையாட முற்பட்டபோது ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் என்னை கையைப் பிடித்து இழுத்தனர். என்னோடு வந்திருந்த அருட்தந்தை சக்திவேலையோ காணாமல் போனோரின் உறவினரையோ ஒருவார்த்தைகூட கதைப்பதற்கு சந்தர்ப்பம்வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக சந்திப்பைத் தவிர்த்து ஜனாதிபதி செல்லும்போது தம்மைச் சந்தித்துவிட்டுச் செல்லுமாறு காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர் அவலக் குரல் எழுப்பினார். உடனே பாதுகாப்புப் பிரிவினர் அவரைப் பலவந்தமாக இழுத்துச் சென்று நீண்ட நேரத்தின் பின்னரேயே அவரை விடுவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் கூடிய புகைப்படத்தில் என்னை பாதுகாப்பு பிரிவினர் கையினைப் பிடித்து இழுக்க முற்பட்ட காட்சி தெளிவாகத் தெரிவதனையும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com