காட்டூனிஸ் பாலா பொலிசால் கைது

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.

இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக,  ‘லைன்ஸ் மீடியா ‘என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். மாறுவேடத்தில் வந்த 4 காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து தரதரவென இழுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எங்கு கொண்டுச் செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com