கல்வி அழிப்புப் பின்னணியில் கல்விச் செயலாளரின் இடமாற்றம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

தமிழர் கல்வி மேம்பாடையக்கூடாது. இனிமேல் தலை நிமிரக்கூடாது. என்ற எண்ணம் கொண்ட தீய சக்திகள் மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளின் விளைவே கல்வியில் வீழ்ச்சி. இதனை நாம் பல தடவைகள் வெளிப்படுத்தி வந்துள்ளோம். இதன் ஒரு கட்டமே வடமாகாணக் கல்வி அமைச்சு செயலாளர் திரு.இ.ரவீந்திரனின் இடமாற்றமும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
வடக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு அதிகாரிகளையோ, அதிபர்களையோ அன்றி ஆசிரியர்களையோ குறைகூறமுடியாது. மாறாக வடபுலத்து அரசியல் கள நிலவரமே முழுக்காரணமும் என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளது.
சங்கம் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கீழ்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்வியலில் மிகவும் இன்றியமையாதது கல்வி. அது சந்ததியின் அறிவுசார்ந்த வளர்ச்சிக்கும் சமூக ஆரோக்கியத்திற்கும் மிக மிக முக்கியமானது.

மாகாண நிர்வாக நடைமுறைகளுக்குப் பின்னர் வடபுலத்துக் கல்வியில் என்றுமில்லாத அளவுக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுவருகின்றது. இதற்கு எமது இனம் சார்ந்த அதிகாரிகளையோ, அதிபர்களையோ அன்றி ஆசிரியர்களையோ குறை சொல்ல முடியாது.

தமிழர் கல்வி மேம்பாடையக்கூடாது. இனிமேல் தலை நிமிரக்கூடாது. என்ற எண்ணம் கொண்ட தீய சக்திகள் மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளின் விளைவே கல்வியில் வீழ்ச்சி. இதனை நாம் பல தடவைகள் வெளிப்படுத்தி வந்துள்ளோம்.

இதன் ஒரு கட்டமே வடமாகாணக் கல்வி அமைச்சு செயலாளர் திரு.இ.ரவீந்திரனின் இடமாற்றமும்.

கடைசி இடத்தில் உள்ள வடமாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக தற்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்கான செயல்வடிவங்களைக் கொடுக்க முனையும்வேளை அவருக்கு இடமாற்றம் வழங்கியிருப்பது எம்மைப் பொறுமை இழக்கச் செய்துள்ளது.

ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த திரு.இ.சத்தியசீலனை வேறு அமைச்சுக்கு மாற்றியதன் பின்னணியும் கல்வி அழிப்புச் செயற்பாடுதான்.

வடகிழக்கு மாகாணம் இணைந்திருந்த காலத்தில் கல்வி அமைச்சின் செயலாளர்களாக இருந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகச் செயற்பட்டனர். அவர்களுக்கு இத்தகைய நெருக்கடிகளை எவரும் வழங்கவில்லை. தற்போதும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பெரும்பான்மை இனம் சார்ந்த ஒருவர் இருப்பதால் அவருக்கு எவராலும் எந்த நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பே இல்லை.
வடக்கு மாகாண நிர்வாக நடைமுறை வந்த பின்னர் கல்வி அமைச்சில் மட்டுமல்ல அனைத்து அமைச்சுகளிலுமே தலையீடுகளும், நெருக்கீடுகளும் அதிகரித்துள்ளன.

இடமாற்றங்களை வழங்கிவிட்டு அதற்கு போலியான பொருத்தமில்லாத காரணங்களைக் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாணத்தில் பல்வேறு கஸ்டமான, நெருக்கடியான காலங்களிலும் பல மாவட்டங்களிலும் பல நிர்வாக வகுதிகளில் கடமையாற்றியவர். இவரது குழந்தைகளும் பள்ளிசெல் பிள்ளைகளாக வடக்கு மாகாணத்திலேயே உள்ளனர். இந்நிலையில் தமது மாகாணம், தமது இனம்சார்ந்த குழந்தைகளின் கல்வி என்ற அக்கறையோடு பல இடர்ப்பாடுகளின் மத்தியிலும் கடமைபுரியும் ஒரு நிர்வாக சேவையாளர். அண்மையில் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இவருக்கு கடும் சுகயீனம்கூட ஏற்பட்டது.

மாறாக வடக்கின் நிர்வாக நடைமுறைகளை முறையாகக் கையாளத் தெரியாத மாகாணசபைத் தலைமைகள் இது போன்ற அதிகாரிகள் இடமாற்றங்களைச் செய்து மக்களைத் திசை திருப்பப்பார்க்கின்றனர்.

மட்டுமன்றி அறிவுசார் பணிகளில் ஈடுபட்டுள்ள கல்விப் புலம்சார்ந்தவர்களையும் முட்டாள்களாக்குகின்றனர்.

இவற்றை இனிமேலும் நாம் பொறுத்துப்பார்க்க முடியாது. கல்விப் புலம்சார்ந்து மக்களோடு ஒன்றியிருக்கும் எமது பலத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் வீடுவீடாகக் களத்தில் இறங்க வேண்டியுள்ளது. எமது பிரதேசம் எம்குழந்தைகளின் கல்வி. எமக்கான சந்ததிச் சேமிப்பு என்ற உணர்வோடு இனி நாம் தொழிற்படவுள்ளோம்.

இத்தருணத்தில் வடமாகாணக் கல்வி அமைச்சு செயலாளரின் இடமாற்றத்தை விரைந்து முன்னெடுத்தவர்கள் யார் என்பதனை நாம் அறிவோம். அதன் பின்னணியும் எமக்குத் தெரியும். அத்தகைய விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஏற்கனவே வடக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றோம்.
ஆகையால் செயலாளரின் இடமாற்றம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும். இல்லையேல் சகல விடயங்களையும் எழுத்துருவாக அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com