கல்விச் சாலைக்குள் நடந்த இயற்கை வளம் அழிப்பு ! – வெட்டி வீழ்த்தப்பட்ட வரலாற்று மரங்கள்

இயற்கைச் சூழலைப் பாதுகாக்கின்றோம் என பல மில்லியன் ரூபாய்க்களைச் செலவழித்து மரம் நடுகையையும் அவற்றைப் பாதுகாப்பதற்கான விளம்பரப்படுத்தல்களையும் வடக்கு மாகாண விசசாய அமைச்சு மேற்கொண்டுவரும் நிலையில் வடமராட்சி சிதம்பராக் கல்லூரியில் பழமைமிக்க பல மரங்கள் அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் சிலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பாடசாலையில் கூடைப்பந்தாட்ட திடல் அமைப்பதற்காகவே மரங்கள் வெட்டப்பட்டதாக பாடசாலை அதிபர் நியாயப்படுத்தினாலும் அதற்காக வரலாற்றுப் பழமைவாய்ந்த சுமார் ஐந்து-ஆறு மரங்களை வெட்டிச் சாய்ப்பதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையமா என்ற கேள்விக்கு மரம் வெட்டியவர்களிடமிருந்தும் அனுமதி வழங்கியவரிகளிடமிருந்தும் எதுவித பதிலும் இல்லை என்பதுதான் உண்மை.

சிதம்பராக் கல்லூரி அதிபர் சில அரசியல்வாதிகளின் செல்வாக்கோடு தான்தோன்றித்தனமாக கல்லூரி வழாகத்திலிருந்த பல மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டதாகவும் அவற்றை வெளிப்படுத்தி நியாயம் கேட்குமாறு தாம் வலிறுயுத்தியபோதும் மக்கள் பிரதிநிதிகளோ ஊடகங்களோ கண்டுகொள்ளவில்லை என அப்பிரதேச மக்கள் சிலரால் வாகீசத்திற்கு தகவல்கள் அனுப்பப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் சம்பவங்களை உறுதிப்படுத்திய வாகீசம் குழுவினர் முதலில் அதிபரிடம் தொடர்புகொண்டனர்.

முதலில் உங்களிற்கு யார் இந்தத் தகவலைச் சொன்னது எனத் தொடங்கிய அதிபர் பின்னராக “ஓம் தம்பி பாடசாலைக்கு கூடைப்பந்தாட்ட திடல் வேண்டும் அதனை அமைப்பதற்காகத்தான் மரங்களை வெட்டினோம். நாங்கள் முறைப்படி மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எல்லா இடமும் அறிவித்துத்தான் செய்தனாங்கள். இதில ஒரு பிரச்சினையும் எழுப்பத் தேவையில்லை” என்றார்.

மரக் கூட்டுத்தாபனத்தினருருடன் பேசினோம். அதிபர்  அனுமதி கேட்டார். நாங்கள் அனுமதி கொடுத்துவிட்டோம். மாணவர்களின் தேவைக்குத்தானே? இனி மரங்களை ஏலத்தில் விற்றுக்கொடுப்போம். என்றனர் அவர்கள்.

பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம் என அதிபர் அனுமதி பெற்றுத்தான் மரங்களை வெட்டியிருக்கின்றார். எனினும் ஒரு காரணத்திற்காக இன்னொரு வளத்தை அழிக்க முடியுமா? மாற்று காணி ஏதும் கூடு கூடைப்பந்தாட்ட திடல் அமைக்க தெரிவுசெய்திருக்க கூடாதா? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றது.

அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு அதிகாரிகள் மட்டத்தில் அனுமதி பெறுவதென்பது சிறிய தொரு விடையமே. அனுமதி பெற்றோம் என்பதை வைத்துக்கொண்டு இயற்கை வளங்களை இவ்வாறு அழிக்க முடியுமா?

வீட்டிற்கு ஒரு நாட்டுவோம் எனும் கோசத்துடன் பாரிய விளம்பரப் பதாதைகளைத் தாங்கியவாறு பல மில்லியன்களை மரம் நடுகைக்காகச் செலவுசெய்யும் விவசாய அமைச்சு கல்விச்சாலைகளிற்குள் நடக்கும் இவ்வாறான இயற்கை வளம் அழிப்புக்களிற்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமா? விவசாய அமைச்சே இது உங்கள் கவனத்திற்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com