கல்விக்காக ஒதுக்கப்படும் மக்களின் வரிப்பணத்தை சில அதிகாரிகள் ஏப்பம் விடுகிறார்கள் – லங்கா சித்த ஆயுர் வேத கல்லூரி மாணவர்கள் குற்றஞ்சாட்டு

SAMSUNG CAMERA PICTURES

வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவுகளை பொருட்படுத்தாது மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி சியாமா துரைரட்ணம் செயற்பட்டுவருவதாக லங்கா சித்த ஆயுர் வேத கல்லூரி மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 75 நாட்களாக தமது கற்றச்செயற்பாடுகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் ஊடகங்களது கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மாணவ பிரதிநிதிகளை அழைத்து சந்தித்து பேசியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக மூவர் கொண்ட விசாரணை குழுவொன்றை அமைக்க மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி சியாமா துரைரட்ணத்திற்கு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஊழல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளாகியிருக்கும் வட இலங்கை சுதேச மருத்துவ சபை பிரபலங்களை எவ்வாறேனும் மீண்டும் பதவியிலமர்த்த முற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.எனினும் அவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளானவர்கள் மீண்டும் நிர்வாக நடவடிக்கைகளினில் ஈடுபட தெரிவானால் தமது போராட்டங்களை விலக்கிக்கொள்ளப்போவதில்லையென மாணவர்கள் தரப்பில் வலியுறுதப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் எமது கோரிக்கைகளை மதித்து எம்மை சந்தித்த வடமாகாண சுகாதார அமைச்சரிற்கு நன்றிகடன் பட்டுள்ளோம்.ஆனால் அவரது உத்தரவுகளை மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி சியாமா துரைரட்ணம் போன்றவர்கள் கவனத்தினில் கூட எடுக்க தயாராக இல்லை.

ஏமக்கு வடமாகாணசபையால் வருடாந்தம் 45 இலட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகவே மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி சியாமா துரைரட்ணம் கூறி வந்திருந்தார்.ஆனால் சுகாதார அமைச்சர் வருடம் 62 இலட்சம் ஒதுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறான ஊழல் மோசடியான வட இலங்கை சுதேச மருத்துவ சபைக்கு வடமாகாண மக்களது வரிப்பணத்தை அள்ளிக்கொட்டிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது அமைச்சரது பணிப்பினையடுத்து வட இலங்கை சுதேச மருத்துவ சபைக்கு புதியவர்களை நியமிப்பதென்ற பேரினில் பழையவர்கள் கதிரைக்கு வர முற்பட்டுள்ளதுடன் தமக்கு தேவையானவர்களை நியமித்து ஊழல்களை தொடர முற்பட்டுள்ளனர்.அதற்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி சியாமா துரைரட்ணம் முன்னின்று செயற்பட்டு வருவதால் அவர் பெற்றுவரும் இலாபம் தொடர்பில் கேள்வி எழுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தள்ளனர்.

எதிர்வரும் 22ம் திகதி நேர்மையான மாணவர்கள் நலன்களில் அக்கறையுள்ள மருத்துவ சபை தெரிவு செய்யப்படாவிட்டால் தமது போராட்டங்களை விலக்கிக்கொள்ளப்போவதில்லையெனவும் மாணவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com