சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / கலாநிதி குருபரனின் விசாரணையிலிருந்து விலகினார் நீதியரசர்

கலாநிதி குருபரனின் விசாரணையிலிருந்து விலகினார் நீதியரசர்

சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூலை 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

“சட்டத்துறை சார்ந்த கல்வியாளர் நீதிமன்றங்களில் முன்னிலையாகி சட்டத்தரணி தொழிலை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதுவே சட்டத்துறை சார்ந்த கல்வியாளர்களுக்கு பொருத்தமாகவும் அமையும். அதனையே பல சந்தர்ப்பங்களில் நான் வெளிப்படுத்தியிருந்தேன். எனவே நான் இந்த மனு மீதான விசாரணையை முன்னெடுக்கும் அமர்விலிருந்து விலகுகின்றேன்” என்று உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன அறிவித்தார்.

அதனால் மனு மீதான விசாரணையை மூவரங்கிய அமர்வை நியமிக்கும் வரை வரும் ஜூலை 16ஆம் திகதிக்கு இன்றைய அமர்வு ஒத்திவைத்தது.

சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார்.

அறம்சார் காரணிகள் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் பதவியை 2019 டிசெம்பர் 4ஆம் திகதி துறந்த பின்னரே இந்த மனுவை கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

அதனால் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் என்ற பதவிநிலையிலேயே அவர் உள்ளார்.

சட்டத்துறையில் போதனைசார் அலுவலகராகப் பணியாற்றுவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வழக்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கும் தத்துவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்றும் அதனை ஏற்றுக் கொண்டமையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை தனது சுயாதீபத்தியம் இழந்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் என 41 எதிர்மனுதாரர்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

இந்த மனு ஜூன் 6ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.

மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் பற்றிய ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு மனு இன்று ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பத்மன் சூரசேன, யசந்த கொதகொட ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன்னிலையாகினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சார்பில் குடியுரிமை வழக்கில் தோன்றியவரான ஜனாதிபதி சட்டத்தரணி ருமேஸ் டி சில்வாவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை சார்பில் மூத்த சட்டத்தரணி இ. தம்மையா மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் மூத்த மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திகா டெமுனி டி சில்வாவின் மூத்த அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா முன்னிலையாகினர்.

மனுதாரர் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

“பல்கலைக்கழக ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ஒழுங்கு விதிகளை உருவாக்கக் கூடிய தகைமை ஸ்ரீபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. அது அந்தந்த பல்கலைக்கழக பேரவைக்கே உரித்தானதாகும். எனவே மனுதாரருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புலமைத்துவ சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும். 1999ஆம் உயர் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பணத்தை ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன்வைத்தார்.

இடையே குறுக்கிட்ட யர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன, “சட்டத்துறை சார்ந்த ஆசிரியர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகும் அவசியத்தை முன்னைய சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதன் காரணமாக தான் இந்த மனுவை கேட்பது தொடர்பில் எதிர் மனுதாரர்களுக்கு ஆட்சேபனை உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.

“எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அமர்விலிருந்து விலகுவதா இல்லையா என்பதை நீதியரசரே முடிவெடுக்கவேண்டும் ” என்று ஜனாதிபதி சட்டத்தரணி ருமேஸ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

தான் இந்த மனு மீதான விசாரணையிலிருந்து விலகுவதாகவும் வேறு ஒரு நீதியரசரை பதிலீடு செய்து மனுவை விசாரிப்பதற்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதியை நியமித்து இந்த அமர்வின் தலைமை நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன கட்டளையாக்கினார்.

முன்னதாக நீதியரசர் எஸ்.துரைராஜா, மனுதாரர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை தனிப்பட்ட முறையில் தெரியும் என்று வெளிப்படுத்தி இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்கமாட்டன் என்று மறுத்திருந்தார்.

“மனுவை பரிசீலனைக்கு எடுப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. மனுதாரர் கோரும் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதிலும் ஆட்சேபனையில்லை. மனுதாரர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையினால் 2011ஆம் ஆண்டு வழங்கி அனுமதிக்கு அமைவாக சட்டத் தொழிலை ஆற்றுவதற்கு ஆட்சேபனையில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி எஸ்.தம்பையா சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

நீதியரசர் யசந்த கொதாகொட, இந்தத் தடை சட்டத்துறைக்கு மாத்திரமா விதிக்கப்பட்ட தடையா என வினவிய போது, ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், அதற்கு ஆம் என்று பதிலளித்ததோடு, உதாரணமாக மருத்துவ பீட ஆசிரியர்கள், தமது தனிப்பட்ட சேவையை வழங்குவதற்கு தடையில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது குறிக்கிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ருமேஸ் டி சில்வா, தனிப்பட்ட சேவையை (Private Practice) மருத்துவர்கள் உள்பட எந்தவொரு பல்கலைக்கழக ஆசிரியர்களும் வழங்க முடியாது என்று வாதிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், இது தவறான வாதம் எனவும் மிகப் பெரும்பாண்மையான மருத்துவ ஆசிரியர்கள் தனிப்பட்ட சேவையை வழங்குவதாகவும் தனது சொந்த மருத்துவரே பேராசிரியர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, நீதியரசர் யசந்த கொதாகொட, சட்ட ஆசிரியர்கள் சட்டத்தொழிலில் ஈடுபடும் பொழுது பெறுகின்ற நடைமுறைசார் அறிவு சட்ட மாணவர்களுக்கு போய்ச் சேர வாய்ப்புள்ளது அல்லவா என்றும் கருத்துரைத்தார்.

மனுதாரர் இந்த மனுவை நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக தாக்கல் செய்துள்ளார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ருமேஸ் டி சில்வா தனது ஆட்சேபனையின் முன்வைத்தார்.

அதனை வன்மையாக மறுத்த ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், தாம் இந்த மனுவை அரசியல்மயப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் அவ்வாறு அரசியலாக்க முயற்சிப்பதைக் கண்டிப்பதாகவும் இந்த விடயத்தை புலமைத்துவ சுதந்திரத்தை முன்னிறுத்திய சட்ட விடயமாகவே நடத்த எத்தணிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பின்னணி

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தானை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 3 பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்து சென்ற போது நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார். 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே 10ஆம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டது.

மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார். எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார்.

மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் வெளியேறிய போது அவரை, இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் அலைபேசியில் ஒளிப்படமோ அல்லது காணொலிப் பதிவோ செய்திருந்தார். அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் கண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த சட்டத்தரணி கு.குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார்.

“தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று சட்ட மா அதிபரால் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனுக்கு பதிலளிக்கப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதம் கிடைத்த அன்றைய தினமே (ஓகஸ்ட் 21) அவசர அவசரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு ஓர் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும்” என்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக ஸ்தாபன விதிக் கோவை 8ஆம் பிரிவின் கீழ் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையால் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தகுதி வாய்ந்த அதிகாரியால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பதிலளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியின் பதில் கடிதம் மற்றும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட கடிதம் என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதிய அமர்வில் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நிகழ்ச்சிக் குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி தகுதிவாய்ந்த அதிகாரியால் முன்வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com