கறுப்புக் கொடி காட்டிய மக்களுக்கு வழமைபோல் தண்ணிகாட்டிச் சென்றார் மைத்திரி ! – ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் சம்பவம் !!

தனக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசிவரை அவர்களைச் சந்திக்காது வழமைபோல ஏமாற்றிச் சென்ற சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இன்று (19.02.2018) நடைபெற்ற ஆய்வுகூடத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.
அவரது வருகையைக் கண்டித்து யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்க விரும்புவுதாக பொலிசார் அழைத்துச் சென்ற நிலையிலேயே இறுதிவரை சந்திக்கர் ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி முன் ஏன் ஆர்ப்பாட்டம் ?

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புகழ் பூத்த எம் முந்நாள் அதிபர் தந்தை அருட்தந்தை G. A. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயிருந்தார். அவரோடு மக்கள் பலரும் காணாமல் போயிருந்தனர். அவர்களது நிலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனக் கூறியும் குறித்த ஆரப்பாட்டம் நடைபெற்றது.

திசை திருப்பிய பொலிசார்

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பொலிசார் மக்களை முன்னகர விடாது தடுத்துக்கொண்டிருந்தனர். யாழ் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்கள் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கி நகர்ந்து செல்ல முற்பட்டபோது மக்களுக்குப் பொலிசாருக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையடுத்து மக்கள் மற்றும் பழைய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலிசார் ஜனாதிபதியின் பிரிவினருடன் மேற்கொண்டாதாகக் கூறிய வாக்குறுதி ஒன்றினை வழங்க முற்பட்டு மக்களை யாழ் பிரதான வீதியின் மறுமுனைக்கு நகர்த்திச் சென்றனர்.

 

ஆர்ப்பாட்டக் காரர்களைக் கண்டுக்காத மைத்திரி

மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஜனாதிபதியின் வாகனம் ஆர்ப்பாட்டக் காரர்களைத் தாண்டி வேகமாக கல்லூரி நோக்கிச் சென்றது. ஜனாதிபதி ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கண்டுகொள்ளாது நகர்ந்து சென்றார்

பொலிசாரின் வாக்குறுதி

பின்னர் ஆர்ப்பாட்டக் காரர்களை நெருங்கிய பொலிசார் உங்களில் முன்று பேரை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாகவும் உடனடியாக மூன்று பேர் வாருங்கள் என்றும் அழைத்தனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்ந்துகொண்டிருக்க மூன்று பிரதிநிதிகள் தயராகினர்.

 

பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்

ஜனாதிபதியைச் சந்திக்க அழைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை பொலிசாரின் வாகனத்தில்தான் வரவேண்டும் என பொலிசார் அழைக்க மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர் நடந்துவர அனுமதிக்கப்பட்டனர். கல்லுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் அமர்த்தப்பட்டனர்.

 

கட்டடம் திறப்பும் ஜனாதிபதி உரையும்

கட்டடத்தைத் திறந்துவைத்த ஜனாதிபதி மைத்திரதிரிபால சிறிசேன காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணைக்குகுழு தனது பணிகளை செய்து வருகின்றது. இது தொடர்பில் சகலருக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தைப்பற்றி நான் அதிகம் பேச வேண்டிய தேவை இல்லை. எனக் கூறி தனது உரையினை முடித்துக்கொள்கின்றார்.

சந்திப்பு நிகழவேயில்லை

பேச்சுவார்த்தைக்கு என அழைத்துச் செல்லப்பட்டவர்கள் காத்திருக்க நிகழ்வு முடிந்து ஜனாதிபதி வெளியேறத் தயாராகிறபோது அழைத்துச் செல்லப்பட்ட பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு மிண்டும் வந்து தமது எதிப்புக் குரலை வெளிப்படுத்தினர்.

மைத்திரியை இடைமறிக்க முயற்சி

பொலிசாரும் ஜனாதிபதியும் இணைந்து நடத்திய கபட நாடகத்தால் கொதிப்படைந்த மக்கள் ஜனாதிபதியின் வாகனத் தொடரணியை மறிப்பதற்கு முற்பட்டபோது பொலிசார் திரண்டு மக்களை முன்னகரவிடாது தடுத்துக்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com