‘கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்…வட்டமிடும் விமானங்கள்… பீதியை கிளப்பும் சத்தம் … அணு உலையில் நடப்பதென்ன?’

அணு உலையில் மர்மமாக நடக்கும் சில விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ள கூடங்குளம் அணு உலை எதிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், அணு உலையில் மர்மமான பல விஷயங்கள் நடப்பதாக பகீர் கிளப்புகிறார். 

தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் நேற்றும், இன்றும் நுாற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன என்பது புரியாமல் மீன்வளத்துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் உரத்தொழிற்சாலை போன்றவைகள் வெளியேற்றும் கழிவுகள் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது. அத்துடன், தாது மணல் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலப்பது, அணு உலையை குளிர்விக்கும் சூடான நீர் கடலில் கலப்பது, அணுக்கதிர்வீச்சு போன்றவையும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கு காரணமாக இருக்கக் கூடுமோ என்கிற அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிறுவனங்களை குற்றஞ்சாட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பளரான சுப.உதயகுமார் கருத்து தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. அணு உலையில் மர்மமான முறையில் பல சம்பவங்கள் நடப்பது குறித்து பல ஐயங்களை எழுப்புகிறார் அவர். இதுபற்றி அவரிடம் பேசினோம்…

கூடங்குளத்தை சுற்றிலும் என்ன நடந்தாலும் அணு உலை மீது பழிபோடுகிறீர்களே? 

இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் 50 முதல் 300 எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணு உலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (ஜனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறிய ரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. 

அணு உலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. அதனால் மக்கள் பீதி அடைந்து போய் இருக்கிறார்கள். ஆனால், அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்! என்று சொல்வதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடங்குளம் அணு உலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்து இருக்கிறாரே?

அங்கே என்ன நடக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது என்கிறேன். மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுக்கிறார்கள். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக அணு உலை இயங்காமல் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால், ஏதோ சோதனைகளை நடத்துவதாக அறிகிறேன். அதனால் அங்கிருந்து அளவுக்கு அதிகமாக சத்தம் கேட்பதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால், அணு உலை நிர்வாகம் வாயை திறக்க மறுக்கிறது. ‘பராமரிப்புப் பணிகள் முடிந்து பிப்ரவரி 15-க்குள் அணு உலை செயல்படத் தொடங்கும்’ என அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் சொல்கிறார். இந்திய அணுசக்திக் கழக தலைவர் சேகர்பாசு, ‘இன்னும் பராமரிப்புபணிகள் நிறைய நடக்க வேண்டியதிருப்பதால் ஜூன் 15-க்கு பிறகு முதல் அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கும்’ என்கிறார். 

இதை எல்லாம் விட வேடிக்கை என்னவென்றால், ரஷ்ய அதிபர் புடின், ஓரிரு வாரத்தில் அணு உலை செயல்படும் என்கிறார். இதில் எதை நம்புவது? யார் சொல்வது சரியானது? ஆளாளுக்கு எதையாவது சொல்லி மக்களை குழப்புவதன் மர்மம் என்ன? மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுப்பது நியாயம்தானா? நாங்கள் ஏற்கெனவே பலமுறை தெரிவித்து இருப்பதுபோல, தரமற்ற உதிரிப்பாகங்களால் அமைக்கப்பட்ட கூடங்குளத்தின் முதல் இரு அணு உலைகள் இயங்கவும் இல்லை. இனிமேல் அவை இயங்கப்போவதும் இல்லை. 

நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அரசானது கூடங்குளத்தில் மேலும் 12 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட இரு அணு உலைக்கு அந்தப் பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் சூழலில், கூடுதல் அணு உலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதன் மூலம் மக்களை பற்றிய சிந்தனை அரசுக்கு இருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.
திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்குவதை அணு உலைக்கு எதிரான உங்களது போராட்டத்துக்கு பயன்படுத்துவதுடன், மக்களிடம் வதந்திகளை பரப்புவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
முன் எப்போதும் இல்லாத வகையில் திமிங்கலங்கள் செத்து மடிகின்றன. அணு உலையில் இருந்து தேவையற்ற சப்தம் வருகிறது. அங்கே போலீஸ் மற்றும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா? ஆனால், அதில் என்ன மறைக்க இருக்கிறது? அணு உலையில் இப்போது என்ன சோதனை நடத்தப்படுகிறது என்பதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வலியுறுத்துகிறோம். 

அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். ஒன்றிய தகவல் ஆணையம், ‘இந்த அறிக்கைகளை மக்களுக்குக் கொடுங்கள்’ என்று பணித்த பிறகும், இந்திய அணுமின் கழகம் டெல்லி உயர் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியிருப்பதை ரத்து செய்து இருப்பது எதற்காக? நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி கொடுங்கள் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவியுங்கள் என்கிறோம். அது அரசின் கடமை அல்லவா?
அரசு கொண்டுவரும் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவியுங்கள். உண்மை பேசுங்கள் என்று நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மக்களை மதித்து செயல்படுங்கள். பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகள் போன்றோர் மக்களிடம் உண்மையாக, நேர்மையாக பேசுங்கள். நீங்கள் அனைவரும் தேவதூதர்கள் போலவும், மக்களை அடிமைகள் போலவும் நினைத்து செய்லபடாதீர்கள் என்கிறோம். இதில் எதையும் செய்யாமலிருந்தால், வதந்திகளும், பீதிகளும் பரவத்தான் செய்யும். அதற்கு மக்கள் பொறுப்பல்ல. 

அணு உலை எதிர்ப்பு தொடர்பாக அரசியல்வாதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறீர்களே. அதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சார்பாக அரசியல்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறோம். தேர்தல் சமயத்தில் அணு சக்திக்கு எதிராக வாக்குறுதி கொடுக்க, பல்வேறு அரசியல் கட்சியினரையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் கட்சித் தலைவரையோ அல்லது முக்கிய நிர்வாகியையோ கூட பார்க்க முடியவில்லை. மக்களின் கருத்துக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பது அவ்வளவுதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds