கருணாநிதிக்கு அல்வா கொடுத்த அழகிரி – அ.தி.மு.க விற்கு ஆதரவு

azhagirilaugh6002சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை.

திமுக – அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பு குறித்து’ அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை’ என்று மீடியாக்களிடம் கருத்துச்சொன்னார் ஸ்டாலின். ஆனால் அந்த சந்திப்பின்போது தான் மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை தந்தை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து வந்த செய்திகளில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் திமுக தனது சட்டமன்ற  வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் ஆட்களே பெருமளவு இருந்தனர். அப்செட் ஆன அழகிரி மீண்டும் வனவாசம் சென்றவர் போல் ஒதுங்கிக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்’ என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம்.  அவர் வாய் திறந்தால் வில்லங்கம் வருமென்று கருணாநிதி தரப்பில் செல்வியிடம் முறையிட்டனர்.

ஆனால் அழகிரி தரப்பு அதை கேட்கவில்லை. மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வரும் கருணாநிதி, அழகிரியை சந்திப்பார். சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று அழகிரியிடம் ஆறுதலாக சொல்லி அடக்கி வைத்தனர்.

ஆனால் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார். ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்காததால் அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பமும் உஷ்ணமாகிவிட்டனர். இதனால் ‘கட்சியை தாண்டி பேரன் பேத்திகளை பார்க்கக் கூட மனமில்லையா’ என அழகிரி தரப்பு எரிச்சலடைந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,’ நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது ஒரு பெண்மணி, ‘தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்க, ‘நான் சொல்றத செய்யுங்கம்மா’ என்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தனர். திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சியைப்போல அமைதியாக இருந்தது அழகிரியின் வீடு. வீட்டிற்குள் போன அழகிரி மறுபடியும் வெளியே வந்தவர் ” வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க” என்று கலங்கினார். அதைக் கேட்டு அழகிரியின் ஆதரவாளர்கள்,” நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் “என்றார்கள்.

அதற்கு “பார்க்கலாம்…பார்க்கலாம்… அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள்  சென்றுவிட்டார் அழகிரி.

அழகிரியின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணனின் பேச்சை கேட்போம் என முடிவெடுத்தாலும் அதற்கு அடுத்த வரிசை  ஆதரவாளர்கள் மனநிலை வேறு மாதிரி உள்ளது.

“இவர்கள் அண்ணனை பயன்படுத்தி அதிகார பலன்களை அடைந்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு கட்சி பின்னணி தேவையில்லை. ஆனால் அண்ணன் சொல்கிறார் என்பதற்காக நாம் அதிமுகவிற்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் கட்சியின் கதவுகள் நிரந்தரமாக நமக்கு அடைக்கப்பட்டுவிடும்.  நாம் பொறுத்திருந்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று தங்களுக்குள் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அழகிரியின் இந்த முடிவால் திமுக தலைமை கடைசி நேரத்தில் அழகிரியால் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அமைதி காப்பதென இப்போதைக்கு முடிவெடுத்திருப்பதாக திமுக தரப்பில் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com