கப்டன் கட்டுப்பாட்டில் தேமுதிக இல்லை – சந்திரகுமார் குற்றச்சாட்டு

வ்வித விளக்கமும் கேட்காமல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அதிரடியாக கூறியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறிய சந்திரகுமார் உள்பட 3 எம்எல்ஏக்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அதிரடியாக நீக்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சந்திரகுமார் கூறுகையில், “தேமுதிகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிலே 24 பேர் இருக்கிறார்கள். அந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நாங்கள் 5 பேர் இருக்கிறோம். எந்தவித விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட விதிகள் எங்கள் கட்சியினுடைய வரலாற்றிலேயே கிடையாது. ஏன் என்று சொன்னால், தலைவருக்கு எதுவரை அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், கட்சியின் கிளைச் செயலாளரோ, ஒன்றிய செயலாளரோ, நகர செயலாளர் வரையிலோ தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்று தலைமை கருதினால் அப்போது கூட இந்த 24 பேர் குழுவின் பரிந்துரையின் பேரில்தான் கேப்டன் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இந்த அடிப்படை விதிகள் எதையுமே பின்பற்றாமல், ஒட்டுமொத்தமாக எங்களை திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக,  எங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை, அவரது மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

அதே போல நாங்கள், நேற்று கூட எங்களை கண்டித்து தலைமை கழகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து பேட்டி அளிக்க சொல்லி இருக்கிறார்கள். நான் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அதிலே பலரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுபோன்று உங்களை பேச சொல்லச் சொல்கிறார்கள். எங்களுடைய கருத்தைதான் நீங்கள் வெளியிட்டீர்கள், அதற்காக எங்களை தவறாக நினைக்க வேண்டாம். உங்களை போன்று பேசுவதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை. ஆதலால் உங்களிடம் நாங்கள் சொல்கிறோம் என்று சொன்னார்கள்.

தலைமையிலே, கேப்டனிடத்திலே, எத்தனை மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை, இந்த கூட்டணியில் போட்டியிட்டால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்று சொல்லி கட்டிய பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டது உண்மையா, இல்லையா, எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் நான் மீண்டும் போட்டியிடவில்லை என்று சொல்லி தான் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றிருக்கிறார்களாக இல்லையா, இன்னும் மாவட்ட அளவிலே முக்கிய பொறுப்பிலே இருப்பவர்கள் எத்தனை பேர் உங்களிடத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மாநில நிர்வாகிகள் சொல்லி இருக்கிறார்கள். ஒதுங்கி இருக்கிறார்கள். இதைத்தானே நான் சொன்னேன். அப்பாவி தொண்டர்கள் ஒன்று இரண்டுபேரை பிடித்துக் கொண்டு அவர்களை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறீர்களே, பழிகடா ஆக்குகிறீர்களே, இது நியாயமா, இதுதான் என்னுடைய கேள்வி, அதே சமத்திலேயே, இப்படி பணம் கேட்டு தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது உங்களுக்கு நல்லவர்களாக தெரிகிறார்களா அல்லது எங்களிடத்திலேயே உங்கள் கருத்துகளை பலமுறை ஆணித்தரமாக சொன்னவர்கள் எல்லாம் இப்போது ஜால்டா அடிக்கிறார்கள்.
எங்கள் உட்கட்சி பிரச்னையில் தலையிடுவதற்கு வைகோவுக்கு அருகதை இல்லை. பணம் வாங்கிக் கொண்டு திமுகவை உடைத்ததை வைகோ ஒப்புக்கொள்கிறாரா? விஜயகாந்தின் விருப்பத்தை மீறி பிரேமலதா விஜயகாந்தே மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார். இந்த தவறான கூட்டணி ஏற்படுவதற்கு பிரேமலதா விஜயகாந்த்தான் காரணம். இனியாவது திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை விஜயகாந்த் எடுக்க வேண்டும். தேமுதிக தற்போது அமைத்துள்ள கூட்டணியால் ஜெயலலிதா தான் மீண்டும் முதலமைச்சராக முடியும். இன்னும் ஓரிரு நாட்களில் தேமுதிக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து விஜயகாந்தை சந்திக்க உள்ளேன். 

ஒவ்வொரு தேமுதிக தொண்டனும், நாங்களும் கேப்டன் முதலமைச்சராக ஆகணும் என்று விரும்புகிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 2011ல் கூட்டணி அமைத்தோம். எதிர்க்கட்சி தலைவர். இந்த 2016ல் அதிகாரத்தின் பங்கு. 2021ல் தேமுதிகவில் கேப்டன் முதலமைச்சர். இதுதான் எங்களுடைய இலக்கு. இதையும் அவரும் ஏத்துக்கிட்டார். நான் அந்த வீடியோ போட்டியை கொடுக்கின்றபோது திமுகவோடு கேப்டன் பேரம் பேசுகிறார் என்ற செய்தி பரவலாக பரப்பப்பட்டது. இதற்காகத்தான் என்னை அவர் பேட்டி கொடுக்க சொன்னார். அவருடைய இடத்தில் இருந்துதான் பேட்டி கொடுத்தேன். இப்படிதான் நாம பேட்டிக் கொடுக்கணும், தவறான செய்தி வந்து கொண்டிருக்கிறது, அவர் சொன்னதை கேட்டேன். அன்றைக்கு வரை நான் விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் இருந்தேன். இன்றைக்கும் இருக்கிறேன். 

பாஜக இவர்களின் சில கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை வைகோ ஏற்றுக் கொண்டு விட்டார். இவ்வளவுதான் சொல்ல முடியும். என் மீது வழக்கு தொடர்வார்கள். திமுகவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் இப்போதும் தேமுதிகவில்தான் இருக்கிறோம். அடுத்து கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆதரவாளர்களுடன் பேசி முடிவு எடுப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com