சற்று முன்
Home / செய்திகள் / கன்னி அமர்வில் கொதித்தெழுந்தார் ஜெயசேகரம் – மாகாண சபை மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டி உரை

கன்னி அமர்வில் கொதித்தெழுந்தார் ஜெயசேகரம் – மாகாண சபை மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டி உரை

எந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் அணிதிரண்டு தங்களது பலத்தைக் காட்டி இந்த மாகாணசபையை தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் பல எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்த சபை தவறியுள்ளது. என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் சுழற்சிமுறை ஆசன ஒதுக்கீடினூடாக உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட அவர் இன்று கன்னியுரையாற்றினார். அதன்போது மாகாணசபைமீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அவர் தனது உரையில்,
“மாகாண சபையில் கடந்த 45 மாதங்களில் நாங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மொத்த தேசிய உற்பத்திக்கு வடமாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கவில்லை. வடமாகாணத்தின் முக்கிய பிரச்சினைகளாகிய நீர் பிரச்சினையை நாம் சரியான முறையில் கையாளவில்லை. நீரை தேக்கி வைக்கக்கூடிய ஆறுமுகத்திட்டம், வழுக்கையாறு திட்டம், உப்பாற்றுத் திட்டம் போன்றவற்றை அபிவிருத்தி செய்திருக்கலாம். இதன் மூலம் நிலத்தடி நீரையாவது பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் கிணறுகளின் நன்னீரில் உவர் செறிவு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

புனர்வாழ்வு விடயத்திற்கும் வாழ்வாதார திட்டத்திற்கும் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை எதிர்பார்க்காமல் சட்டரீதியாக வேறு பொறிமுறையை கையாண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் அந்த முயற்சியை எடுக்கவில்லை. போரினால் கைவிட்ட நெல்வயல்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மீன்பிடித்துறையில் போதுமான அபிவிருத்தி மேற்கொள்ளவில்லை. கல்வியைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.இந்த விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சும் பாடசாலை நிர்வாகமும் போதிய அக்கறை காட்டவில்லை.

நாம் பல வகையில் எமது இனத்தின் விடிவுக்காக போராடியுள்ளோம் . இறுதியாக ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு எமக்கு எஞ்சியுள்ளது மூன்று தெரிவுகளே! ஒன்று அபிவிருத்தியை நோக்கி பயணிப்பது மற்றது தன்நிறைவான பொருளாதாரத்தை நோக்கிப் பயணிப்பது அடுத்தது அறிவுபூர்மாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தமிழ்மக்களுக்கான தீர்வை நோக்கி பயனிப்பது.
இதிலே மூன்றாவதாக கூறிய அறிவுபூர்மாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தமிழ்மக்களுக்கான தீர்வை நோக்கி பயணிப்பதற்கு எமது தலைவர்கள் முயன்றுகொண்டு இருக்கின்றார்கள் அதிலே நாம் வெற்றியடைவோம் என நம்புகின்றோம்.ஏனைய இரண்டு விடயங்களான அபிவிருத்தியை நோக்கி பயணிப்பது மற்றும் தன்நிறைவான பொருளாதாரத்தை நோக்கிப் பயணிப்பது போன்றவை எமது மாகாணசபையால் சாதிக்கக்கூடியவை. ஆகையால் அந்த இரண்டு விடயத்தையும் முன்னெடுப்பதிலும் சாதிப்பதிலும் தவறிழைத்து விட்டோம்.

 

கௌரவ அவைத்தலைவர் அவர்களே நான் இங்கே எல்லாவற்றையும் குறைகூற வரவில்லை. ஆக்க பூர்வமான மாற்றுத் திட்டங்களை அல்லது எவ்வாறான திட்டங்களை மேற்கொண்டால் எமது இலக்கை அடையலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றேன். வடமாகாணத்திலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குண்டு. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமானவர்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பாகவும் நாங்கள் அக்கறைகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அவர்களின் வாழ்வில் பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும். ஆகையால் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நாங்கள் சரியான முறையில் வகுத்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும் என வேண்டுகின்றேன். இதற்கு நாங்கள் வணிகர் கழகமூடாக பல திட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளோம். எனவே அது தொடர்பான ஆலோசனைகளை வழங்க நான் தயாராகவுள்ளேன்.

அது மட்டுமல்ல தன்நிறைவான பொருளாதாரத்தை நோக்கியும் அபிவிருத்தியை நோக்கியும் நாம் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. உடனடியாக செய்ய வேண்டிய திட்டங்கள் நீண்ட கால இடைவெளியில் செய்ய வேண்டிய திட்டங்கள் என பாகுபடுத்தி மேற்கொள்ளலாம். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ முதலமைச்சர் மாகாணசபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புக்கள் புலமைசார் நிபுணர்களை உள்ளடக்கியதான திட்டகுழு ஒன்றை அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய திட்டங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் முன்வர வேண்டும்.

அடுத்தபடியாக தன்றிறைவான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு எங்களுடைய வளங்கள் எங்கெங்கே இருக்கின்றது என்பதனை அறிந்து எப்படியான முறையில் அந்த பொருளாதார வளங்களை பயன்படுத்த முடியும் அதே நேரம் எங்கெங்கே தொழிற்சாலைகள் அமைக்க முடியும் எங்கெங்கே உப்பளங்கள் அமைக்க முடியும் எங்கெங்கே விவசாயநிலங்களை பெருந்தோட்டத்துறையை பெருக்க முடியும் மீன்பிடித்துறையை எப்படி வளத்தெடுக்க முடியும் அப்படியான பல திட்டங்களை அந்த திட்ட குழு வகுக்க முடியும். அப்படி நாங்கள் வகுத்தால் எதிர்காலத்தில் எந்த எந்த இடங்களில் எவ்வாறான மையங்களை அமைக்கலாம் என்பதனை முன்கூட்டியே அறியக்கூடியதாக இருக்கும்.

தேவையில்லாத பிரச்சினைகளையும் தாமதங்களையும் தவிர்க்க முடியும். எனவே உடனடியாக இக் குழுக்களை உருவாக்கி நாம் செயற்பட வேண்டும் ஏனெனில் எமக்கு இன்னும் எஞ்சியிருப்பது ஒரு குறுகியகாலம் மட்டுமே. இந்த காலத்திற்குள் நாம் எல்லா அபிவிருத்தியையும் அடைந்து விடுவோம் அல்லது தன்னிறைவு அடைந்து விடுவோம் என நான் நினைக்கவில்லை. இதற்கான அடித்தளத்தை அமைத்து ஓரளவு முன்னேற்றத்தையாவது இந்த குறுகியகாலத்தில் அடையமுடியும் என நான் நம்புகின்றேன். அத்துடன் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் இடம் பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களையும் அழைத்து முதலீடுகளை மேற்கொள்ளும் படி கோரியிருக்கலாம். ஆனால் இதனை செய்ய நாம் தவறியுள்ளோம். இதனால் தான் சில மாதங்களுக்கு முன் ஆளுனர் இவ்வாறானதொரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினையாகிய மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமைஇ காணாமல் போனவர்களின் பிரச்சினைஇ சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதுஇ மீள்குடியேற்றம் போன்றவற்றை நாம் எமது தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு; ஜனாதிபதியையும்இ பிரதமரையும் நாம் அனைவரும் சந்திக்க வேண்டும். இந்த அரசு அமைத்ததுக்கு எமக்கும் முக்கிய பங்கு உள்ளது. பிரச்சினைகளை பிரச்சினை ஏற்படுத்துவர்களுடனே கதைக்க வேண்டும்.

அத்துடன் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான திட்டங்களை வகுக்கக்கூடிய ஆலோசனைக் குழு உடனடியாக கூட்டி நாங்கள் செயற்படுவதன் மூலம் மத்திய அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை தவிர்க்க முடியும். அதேநேரம் இப்போது சில இடங்களில் குடியேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பத்திரிகை வாயிலாக நாம் அறிகின்றோம். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நாங்கள் மாகாணசபையிலே பிரேரணைகளை கொண்டு வர முடியும்.

வட மாகாணசபையின் அனுமதியில்லாமல் எந்த காணியையும் அரச அதிகாரிகள் கையாளக்கூடாது என்பதனை சட்டரீதியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இது அரச அதிகாரிகளுக்கு இது ஒரு அறிவுறுத்தலாகவும் அமையும். ஆகையால் இப்படிப்பட்ட நடைமுறைகளை நாங்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும் நீண்டகால இருப்பிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய பல விடயங்கள் முன்னெடுக்கப்படவில்லை. பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி மூலங்களை பெற்றுக்கொள்வதில் நாம் சரியாக செயற்படவில்லை. உதாரணமாக யாழ் மாநகர பாதாள சாக்கடைத்திட்டம் கழிவு முகாமைத்துவம் போன்ற விடயங்களில் நாம் முனைப்பாக செயற்படவில்லை.

எம்மால் இலகுவாக மேற்கொள்ளப்படக்கூடிய பல வேலைத்திட்டங்களைக் கூட நாம் செய்யவில்லை. இது வேதனைத் தரக்கூடிய விடயமாக உள்ளது. எனவே கௌரவ முதலமைச்சர் அவர்களும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த உயரிய சபையானது தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அபிவிருத்திக்காகவும் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டுக்காகவும் விரைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். – என்றார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com