கனவில் வரும் என் மகனை நிஜத்தில் மீட்டுத்தாருங்கள்

கனவில் வரும் என் மகனை நிஜத்தில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாய் ஒருவர் கண்ணீருடன் கோரியுள்ளார். 

யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், எனது மகனான ராஜாஜி தவராஜ் ( காணமல் போகையில் வயது 25 ) காரைநகரில் உள்ள எமது வீட்டில் இருந்து வேலை காரணமாக யாழ்ப்பாணம் சென்ற வேளை 2006ம் ஆண்டு 10ம் மாதம் 19ம் திகதி காணாமல் போய்விட்டார். அதன் பிறகு பல இடங்களில் தேடியும் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. 
இரவு நித்திரையில் கனவில் மகன் “அம்மா ” என அழைத்து கொண்டு ஓடிவருவது போல காண்பேன். திடுக்குற்று எழுந்தால் ,மகன் இருக்க மாட்டார். அத பின்னர் மகனை நினைத்து அழுது கொண்டு இருப்பதனால் அன்றைய இரவு தூக்கம் அற்றதாக கழியும். இவ்வாறு பல இரவுகள் கழிந்து விட்டன. இரவில் சரியான தூக்கமின்மை காரணமாக எனது உடல் நலமும் குன்றி விட்டது. வருத்தங்களும் வந்து விட்டன. இன்னமும் எத்தனை காலம் உயிரோடு இருப்பேன் என தெரியாது. எனவே எனது மகனை விரைவில் மீட்டு தருமாறு கோருகின்றேன் என சாட்சியத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com