கதிரைகளை ஏன் மாற்றினார் சி.வி.கே ? அம்பலப்படுத்தியது ஆர்.ரி.ஐ. ரிப்போட்

ஏனைய மாகாணசபைகளில் தவிசாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அமைப்பை ஒத்தவகையில் இம் மாகாணசபையின் தவிசாளரின் கதிரையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் பலர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே வடக்கு மாகாணசபை தவிசாளருக்கு மூன்றாவது கதிரை மாற்றப்பட்டதாக வடக்கு மாகாண பேரவைச் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவைத்தலைவருக்காக மூன்றாவது கதிரை மாற்றப்பட்ட நிலையில் அவருக்கான கதிரை மாற்றல்களுக்காக இதுவரை சுமார்  ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி செலவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அவைத்தலைவரின் ஆசனம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பேரவைச் செயலகம் அதற்கு பதிலளித்திருந்தது.

முதலாவது கதிரை

பேரவைச் செயலகத்தினை அமைக்கும்போது மாகாண கட்டங்கள் திணைக்களத்தினால் பேரவைச் செயலகத்திற்கான அனைத்து தளபாடங்களும் டம்றோ நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதில் அவைத்தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனம் ஒரு குசன் சொகுசு ஆசனமாகும். இதன் பெறுமதி சுமார் 18 ஆயிரம் ரூபா ஆகும்

இரண்டாவது கதிரை

அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் ஆசனம் அசௌகரியமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைவாக இருவருக்குமாக ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 900 ரூபா விற்கு ஆசனங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.

இரண்டாவது கதிரைக்கான நிதி

குறித்த இரண்டு கதிரைகளுக்குமான ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 900 ரூபா நிதி மூலதனச் செலவிற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது கதிரை

ஏனைய மாகாணசபைகளில் தவிசாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அமைப்பை ஒத்தவகையில் இம் மாகாணசபையின் தவிசாளரின் கதிரையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் பலர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  வடக்கு மாகாணசபை தவிசாளருக்கு மூன்றாவது கதிரை மாற்றப்பட்டது.

அதற்காக நான்கு நிறுவனங்களிடம் விலை கோரல் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டியிலுள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து 65 ஆயிரம் ரூபாவிற்கு குறித்த மூன்றாவது ஆசனம் செய்விக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கதிரைக்கான நிதி

குறித்த மூன்றாவது கதிரைக்கான 65 ஆயிரம் ரூபா நிதி மூலதனச் செலவிற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார்  ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி சி.வி.கே யின் கதிரைகளுக்காக  செலவிடப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. மூலதனச் செலவு எனும் பெயரில் நிதியைக் கையாண்டு அசௌகரியமில்லை, அழகாக இல்லை என அடிக்காடி கதிரைகளை மாற்றும் இவர்கள் மக்களுக்கு பயனற்ற வகையில் வெற்றுத் தீர்மானங்களை அவையில் நிறைவேற்றுவதோடு நின்றுவிடுவதாகவும் நியதிச் சட்டங்களையோ வேலைவாய்ப்புக்களையோ மக்களின் பிரச்சினைகளுக்கோ ஆதரவளிப்பதில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com