கதிரவேல் ஐயா – காலத்தின் பொக்கிஷம் – ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்போம்

மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கலாபூசணம் ச.கதிரவேலு ஐயா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவரது உயிர் பிரிந்தது.
ஊடகத்துறையில் 35 வருடங்களுக்கு மேலாக அவர் சேவையாற்றியுள்ளார்.
தமிழராட்சி மாநாட்டு படுகொலை , மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல நெருக்கடி சமயங்களில் கூட சிறந்த புகைப்பட ஊடகவியலாளராக அவற்றை வெளிக்கொணர்ந்தவர்.
பொலிசாரின் தாக்குதலால் தனது ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இவர் இழந்தார். எனினும் அவரது ஊடகப் பணி தொடர்ந்தது.
இன்றும்கூட 84 வயதிலும் ஒரு இளைஞரைப்போல் கமெராவும் கையுமாக அவரை பல நிகழ்வுகளில் காணமுடியும்.
இந்நிலையில் அவரின் திடீர் பிரிவு ஆழ்ந்த வேதனையைத் தருகிறது.
இவர் ஊடகத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2012 ஆம் ஆண்டு கலாபூசணம் விருதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.ஊடக அமையத்தால் சிறந்த ஊடக சேவைக்காக கதிரவேலு ஐயா கௌரவிக்கப்பட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தவரும் அவரே.
இறுதியாக கடந்த மாதம் யாழ் ஊடக அமைத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவுநாளில் கதிரவேல் ஐயா சிறப்புரை ஆற்றியிருந்ததோடு நிறுவன பேதங்களிற்கு அப்பால் ஊடகவியலாளர்கள் எமது சமூகத்திற்கான ஒன்றுபட்டு பணியாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com