கண்டி வன்முறைகளின் பின்னணியில் யார் ? – அடையாளம் கண்டுவிட்டதாக அரசாங்கம் தெரிவிப்பு !

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் மோசமான சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை இனங்கண்டுள்ளதாகவும் இச் சம்பவங்களில் ஈடுபட்டோர் எவராயினும் எந்தவித தராதரமும் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இனங்காணப்பட்டுள்ளவர்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியொன்றின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் அதே கட்சியுடன் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் செயலாளரும் அரசியல் கட்சியொன்றின் மாவட்ட அமைப்பாளரும் உள்ளடங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு குழப்பகரமான நிலையைத் தோற்றுவிக்க செயற்பட்டவர்களில் திகன, தெல்தெனிய மற்றும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த எவரும் உள்ளடங்கவில்லையென்றும், வெளிப் பிரதேசங்களிலிருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களே சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவர்களுக்கெதிராக வெகு விரைவில் சட்ட நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் அப்பகுதியில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட இத்தரப்பினர் பாரபட்சமின்றி தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. நேற்றைய தினம் இம்மாநாடு கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், விசேட மாநாடாக இடம்பெற்றதுடன் அமைச்சர்கள் கபிர் ஹாஷிம், கயந்த கருணாதிலக, மத்துமபண்டார, கலாநிதி சரத் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஆகியோரும் இம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்துக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் சம்பவங்களே தெல்தெனிய திகன உட்பட அப்பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி சம்பவங்கள் தொடர்பில் முதலில் நாலு பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அதன்பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இணையத் தளங்கள் மூலமும், சில ஊடகங்கள் மூலமும் பல திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் இனவாதத்தை தூண்டும்வகையில் வெளிவந்துள்ளன. மேற்படி சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினமிரவு அமைச்சரவை அமர்வுக்குப் பின்னர் பாதுகாப்பு சபை முக்கியஸ்தருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தகவல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது எந்தவிதத்திலும் வன்முறைக்கு துணைபோகமுடியாது. அவ்வாறு இடம்பெறும் நிலையில் அரசாங்கம் அதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்னிற்காது.

தெல்தெனிய சம்பவம் ஒரு திட்டமிட்ட ஏற்பாடாகும். ஒரு சிறு சம்பவத்தை வாய்ப்பாக்கிக் கொண்டு இனவாதிகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளியிலிருந்து நபர்களை பஸ்களில் ஏற்றிவந்து குழப்பகரமான நிலைமைக்கு தூபமிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்ட குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் நூற்றுக்கு 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் செயற்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு மேலும் 11 பேர் தேவைப்படுகின்றனர். இந்த நோக்கத்தை அடைவதற்காக சிறுபான்மை மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு கிடைக்காத வகையில் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் ஒரு அம்சமே இந்த மோசமான சம்பவங்களாகும்.

ஜனாதிபதியும் பிரமதரும் இதுதொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உரிய பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டுவோருக்கு எவரும் துணைபோகக் கூடாது. மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com