கண்டியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது – மீண்டும் மாலை 06 மணிக்கு அமுலாகும் !

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச்சட்டம் இன்று மீண்டும் மாலை 6.00 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைபின்வருமாறு,

பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் விநியோகிப்பதற்குமான கால அவகாசத்தை வழங்கும் பொருட்டு கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துமாறு பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கவனத்தில் கொண்டு தற்பொழுது நடைமுறையிலுள்ள ஊரடங்குச்சட்டம் இன்று (மார்ச் 08 வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நீக்குவதற்கும் மீண்டும் இதே தினம் மாலை 6.00 மணிக்கு அமுல்ப்படுத்துவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மார்ச் 8ஆம் திகதி காலை 10.00 மணியிலிருந்து இன்று மாலை 6.00 மணி வரையில் ஊரடங்குச்சட்டத்தை நீக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோவினால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிவாரண காலத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com