கண்குறைபாடுகளுக்குக் காரணமான கிரக அமைப்புகளும் பரிகாரங்களும்! #Astrology

ஐம்புலன்களில் கண்களுக்குத்தான் முதலிடம். கண்கள்தான் இந்த உலகை நாம் பார்க்கக் காரண கர்த்தாவாக இருக்கின்றன. கண்கள் இல்லாவிட்டாலோ, கண்குறைபாடு ஏற்பட்டாலோ நாம் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல… வாழ்க்கையே சூன்யமாகி விடுகின்றது.

கண்குறைபாடு

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஜோதிட ரீதியான காரணங்கள் என்ன? என்பது பற்றி ஆஸ்ட்ரோ சுந்தரைக் கேட்டோம்.

பொதுவாக, ஜோதிட ரீதியாக ஒவ்வொரு உறுப்பும் ஒரு கிரகத்தின் காரகத்துவத்தைப் பெறுகின்றன. இதில் கண்பார்வைக் குறைபாட்டை ஆஸ்ட்ரோ சுந்தர்ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் பற்றி பார்ப்போம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வலது கண்ணுக்கு சூரியனும், இடது கண்ணுக்கு சந்திரனும் காரகத்துவம் பெற்ற கிரகங்களாக அமைந்துள்ளனர்.

கண்பார்வைக்கு காரகத்துவம் பெறும் கிரகம் சுக்கிரன்தான். அசுப தொடர்புகள் இன்றி, ஒருவருக்கு சுக்கிரன் லக்னத்திலேயே அமைந்துவிட்டால், அப்படிப்பட்டவர்களுக்கு களையான முகமும், அழகான கண்களும் அமையும். சுக்கிரனுடன் சனி இணையப்பெற்றவர்களின் கண்கள் சிறியதாக இருக்கும்.

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அணிகின்ற கண்ணாடியின் (Lense) காரகத்துவமும் சுக்கிரன்தான். கண் மருத்துவராகவோ அல்லது கண்ணாடி கடை (Optical) வைத்திருப்பவர்களாகவோ இருப்பவர்களுக்கு, சுக்கிரன் நிச்சயம் பலமாக இருக்கும். மேலும், தொழில் மற்றும் ஜீவன ஸ்தானமான 10- ம் இடத்துக்கும் தன ஸ்தானமான 2-ம் இடத்துக்கும் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்கின்றது ஜோதிட சாஸ்திரம்.

ஜாதக ரீதியாக 2-ம் வீடு வலது கண்ணையும் 12-ம் வீடு இடதுகண்ணையும் குறிக்கின்றன. பலமான சுப கிரகத் தொடர்பு பெற்ற 2 -ம் வீட்டதிபதி இருந்தால், அழகான ஆரோக்கியமான கண்கள் அமையும். ஆனால், 2 -ம் வீடு அல்லது 2-ம் வீட்டின் அதிபதிக்கு 6-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடங்களான மறைவு ஸ்தானங்களின் தொடர்பு ஏற்பட்டால், கண்களில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்படும்.

சந்திரன் 12- ம் இடத்தில் அமைந்தால், இடது கண்ணுக்கும் சூரியன் 12- ம் இடத்தில் அமைந்தால், வலது கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இரண்டாம் இடத்திலும் – பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து, இந்த இடத்துக்குரிய கிரகங்கள் பலமில்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .

நவகிரகங்கள்

* சூரியன் லக்னத்தில் இருந்தால், கண்களைப் பாதிக்கும். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெறுவதால், கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால், கண்களில் உஷ்ணத்தால் எரிச்சல் ஏற்படும்.

* சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால், மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன், கடக லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும். சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால், பார்வைக் குறைபாடு ஏற்படும்.
சூரியனும் சந்திரனும் இணைந்து 2- ம் இடத்தில் நிற்பது மாலைக்கண் நோயை ஏற்படுத்தும்.

மாங்காடு காமாட்சியம்மன்

கண்பார்வைக் குறைபாடுள்ளவர்கள், பரிகாரமாக, சுக்கிரனுக்குரிய ஸ்தலங்களான கஞ்சனுர், ஸ்ரீரங்கம் மாங்காடு காமாட்சியம்மன், சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், தேனி மாவட்டம், வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com