கடும் பாதுகாப்பு; 4,000 அதிரடிப்படை, 61,000 பொலிஸ்

உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார பணிகள் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் 48 மணிநேர தேர்தல் பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக முன்னெடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (08) முதல் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் 4,000 விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 65, 758 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர்,தேவை ஏற்பட்டால் கடமையில் ஈடுபடுத்துவதற்கென கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு மறுநாள் 11 ஆம் திகதி வரை சகலவித ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதோடு தேர்தலுடன் தொடர்புள்ள பிரசார சுவரொட்டிகள் பதாகைகள், பெனர்கள் என்பனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு 13,420 மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் தலா இரு பொலிஸார் வீதம் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கென 26,840 பொலிஸார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

இது தவிர வாக்களிப்பு நிலையங்களை அண்மித்ததாக 3225 ரோந்து குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதோடு அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்படுவர். ரோந்து பணியில் பொலிஸார்,சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கலாக 13,552 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக 1174 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் 25 நிலையங்களுக்கு அருகில் 1275 பொலிஸார் பயன்படுத்தப்படுவதோடு 140 கலகமடக்கும் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பர்.

தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்காக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மேலதிக உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு 464 வீதி சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு 3248 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொலிஸாருக்கு மேலதிகமாக 5953 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

பொலிஸார் இன்று (8) தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று கடமையை பொறுப்பேற்க இருக்கிறார்கள். தேர்தலின் போது எவ்வாறு செயற்பட ​வேண்டும் என்பது தொடர்பில் அவர்களுக்கு அறிவூட்டப்படும்.

நேற்று நள்ளிரவு முதல் சகலவிதமான பிரசாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது நேற்று இரவு 9.00 மணி முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.வேட்பாளர்களுக்கு தமது அலுவலகத்திற்கு அருகில் கட்அவுட்.பெனர் என்பவற்றை காட்சிப்படுத்த முதலில் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நேற்று நள்ளிரவு முதல் வேட்பாளரின் வாகனத்தில் கொடியொன்றை தொங்க விட மாத்திரமே அனுமதி உள்ளது.

48 மணி நேர தேர்தல் பிரசார சூன்ய காலம் அமுலில் உள்ளதால் தேர்தல் சட்டங்களை முழுமையாக பின்பற்றுமாறு வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் கோருகிறோம்.

இதுவரை தேர்தல் தொடர்பில் 567 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு21 வேட்பாளர்கள் அடங்கலாக 135 பேர் கைதாகியுள்ளனர்.பொலிஸ் சுற்றிவளைப்புத் தேடுதலில் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பில் 356 பேர் கைதாகியுள்ளனர் என்றார்.

341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இது வரை தேர்தல் முறைகேடுகள் குறைவாக பதிவாகியுள்ளன.தேர்தல் வாக்களிப்பின் போது முறைகேடுகள் மோசடிகள் நடந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com