கடன் சுமையில் நாடு ! மக்கள் மீது வரி ! அமைச்சர்களுக்கு சொகுசு வாகன இறக்குமதி அவசியமா?

n-10அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள்  பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மநாடு இதனால் சர்ச்சைக்களமாக மாறியது.

அதன்போது பதிலளித்த  அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களான அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோர் அதிக விலையில் கார் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுத்துள்ளமை தொடர்பிலும் தெளிவுபடுத்தினர். அமைச்சர்களுக்கு 20 வருடங்களுக்குப் பின்னரே வாகனம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவசியம் கருதியே அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மக்களை அர்ப்பணிப்புச் செய்யுமாறு கோரி, ‘வற் வரி’ யையும் மக்கள் மீது விதித்து அமைச்சர்களாகிய நீங்கள் மட்டும் சொகுசை அனுபவிப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கார் கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பது முறையாகுமா என ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க. நான் நிதியமைச்சரின் சார்பிலேயே இது தொடர்பான குறை நிரப்புப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பித்தேன்.

கடந்த காலங்களிலும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அமைச்சர்களுக்குக் கார்கள் கொள்வனவு செய்யப்பட்டது. எனது பிரதியமைச்சர் உபயோகிப்பது கூட எட்டு வருடங்கள் பழமையான கார்தான்.

மக்கள் சேவைக்காக அமைச்சர்கள் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொள்பவர்கள். மற்றவர்களை விட அவர்களுக்கே மிக அதிகமாக வாகனத்திற்கான அவசியம் உள்ளது. இதனால் கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்றே இன்றுள்ள அமைச்சர்களுக்கும் கார்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

ஊடகவியலாளர்கள் மேலும் கேள்வியெழுப்பிய போது 3.5 கோடி ரூபா செலவில் அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பது நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முறையாகுமா? எனக் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், ‘சாதாரணமாக அமைச்சர்கள் உபயோகிக்கும் கார்களுக்கு இதுபோன்ற விலையே உள்ளன. 5 வருடங்களின் பின்னர் அமைச்சர்கள் அதற்கான விலையை வழங்கியே வாகனத்தை உரிமையாக்கிக் கொள்வர் என்றும் தெரிவித்தார். அத்துடன் அவற்றின் பராமரிப்பும் இம்முறை அமைச்சர்களையே சாருகிறது.

 

அவசியம் கருதியே இத்தகைய வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. நாட்டின் கார்களின் விலை தற்போது இந்த விதத்தில் தான் உள்ளன.

பெரும் கடன் சுமை உள்ளது எனக் கூறி மக்களிடம் ‘வற்வரி’ அறவிட்டு மக்கள் அர்ப்பணிப்பு செய்வது அவசியம் என்று கூறினீர்களே அந்த அர்ப்பணிப்பு அமைச்சர்களுக்கு கிடையாதா? என இங்கு கேள்வி எழுப்பப்ட்டது.

அமைச்சர்களும் பெரும் அர்ப்பணிப்பைச் செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ஜனாதிபதி மாளிகையில் 1500 வாகனங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. எனினும் நாம் அமைச்சுக்களுக்காக சட்டப்படி பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே இம்முறை கார் பெறவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனராத்ன, கடந்த 20 வருடங்களாக அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்யப்படவில்லை. தற்போதுள்ள வாகனங்கள் உபயோகிக்க முடியாத நிலையிலேயே உள்ளன. இதனால் அவசியம் கருதியே வாகனங்களைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையகப் பிரதேசங்கள், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் செல்வதற்கு சிறந்த கார்கள் அவசியம் அதற்கு இதுபோன்ற வாகனங்கள் அவசியமாகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com